- திரிணாமுல் காங்கிரஸ் நிறுவன தினம்
- மம்தா பானர்ஜி
- கொல்கத்தா
- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி
- அறக்கட்டளை நாள்
- காங்கிரஸ் கட்சி
- உரிமைகள்
கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் நிறுவன நாளையொட்டி மக்கள் உரிமைகளுக்கான போராட்டம் தொடரும் என அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி உறுதியுடன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து கடந்த 1998 ஜனவரி 1ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு, அதன் தலைவராக மம்தா பானர்ஜி பொறுப்பு வகித்து வருகிறார். 2001, 2006ம் ஆண்டு மாநில பேரவை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது.
பல்வேறு தடைகளை கடந்து 2011 பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த திரிணாமுல் காங்கிரஸ், தொடர்ந்து 2016, 2021 பேரவை தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடியது. கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தொடர்ச்சியாக 3வது முறையாக முதல்வராக பதவி வகித்து வருகிறார். கட்சி தொடங்கி நேற்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைந்து, 28ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தன் முகநூல் பதிவில் கட்சியினருக்கும், மாநில மக்களுக்கும் செய்தி ஒன்றை வௌியிட்டுள்ளார்.
அவர் வௌியிட்டுள்ள செய்தியில், “முதலில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். புத்தாண்டுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாளும் கொண்டாடப்படுகிறது. மாநில மக்களின் உரிமைகளுக்காக திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து போராடி வருகிறது. எதிர்காலத்திலும் இந்த போராட்டம் தொடரும்” என உறுதி அளித்துள்ளார்.
இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுசெயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி தன் முகநூல் பதிவில், “தேசிய மற்றும் மாநில மக்களின் நலனுக்காக திரிணாமுல் காங்கிரஸ் எப்போதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும். கட்சி தொண்டர்களின், ஊழியர்களின் கடின உழைப்புக்கும், தியாகத்துக்கும நான் தலைவணங்குகிறேன். நீங்கள் கட்சியின் முதுகெலும்பு. புத்தாண்டில் புதிய உற்சாகத்துடன் தயாராவோம். எதிர்கால போராட்டங்கள் நம் முன்னால் உள்ளன” என தெரிவித்துள்ளார்.
The post திரிணாமுல் காங்கிரஸ் நிறுவன நாள் மக்கள் உரிமைகளுக்கான போராட்டம் தொடரும்: மம்தா பானர்ஜி உறுதி appeared first on Dinakaran.