×

மின் கம்பிகளை இழுத்து கட்டி கம்பங்கள் சீரமைப்பு

காடையாம்பட்டி, ஜன.1: காடையாம்பட்டி அருகே ஆங்காங்கே மின் கம்பங்களில் செடி கொடிகள் மற்றும் மரக்கிளைகள் படர்ந்தவாறு காணப்பட்டதால், விவசாய மின்மோட்டார்கள் பழுதடைந்து வருவது குறித்து தினகரனில் செய்தி வெளியானதன் எதிரொலியாக நேற்று ஒரே நாளில் சரிசெய்யப்பட்டது. பொக்லைன் கொண்டு மரக்கிளைகளை அகற்றியபோது எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பிரமுகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா சின்னதிருப்பதி மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட சின்னதிருப்பதி மற்றும் கொங்குப்பட்டி, மூக்கனூர், கஞ்சநாயக்கன்பட்டி, செம்மாண்டப்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் நிறைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாசனத்திற்காக மின்மோட்டார் வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக கஞ்சநாயக்கன்பட்டி, சோலை நகர், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்களுக்கு மத்தியிலும் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்தது. மேலும், மின் கம்பத்தின் மீது செடி கொடிகள் படர்ந்தவாறு காணப்பட்டது. இதனால், மின்பாதையில் தொய்வு ஏற்பட்டு அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் அவதிக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானது. இதையடுத்து, மின் கம்பத்தில் படர்ந்திருந்த செடி கொடிகள் மற்றும் மரக்கிளைகளை பொக்லைன் கொண்டு அகற்றினர். மரக்கிளைகளை அகற்றியபோது ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. சோலை நகர் அரசு புறம்போக்கு ஓடையில் மின் கம்பியில் இருந்த முள்மரங்களை அகற்றியபோது அதிமுகவை சேர்ந்த ஒருவர் மின்வாரிய ஊழியரை தகாத வார்த்தையால் திட்டி தகராறு செய்தார். மேலும், ஓமலூர் எம்எல்ஏவை மின்சார அலுவலகத்துக்கு கூட்டி வந்து உன்னை ஒலிக்காமல் விட மாட்டேன் என மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து மின் வாரிய ஊழியர் கொடுத்த புகாரின்பேரில், உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தினகரன் செய்தி எதிரொலியாக ஒரே நாளில் மின் கம்பியில் படர்ந்த மரக்கிளைகளை அகற்றி சரி செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post மின் கம்பிகளை இழுத்து கட்டி கம்பங்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Kadaiyampatti ,Dinakaran ,
× RELATED லாரியில் ஏறி திருட முயன்ற 2பேர் கைது