×

வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சீமான் உள்பட 231 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து சீமான் போராட்டம் நடத்த வந்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

மனுவில் குறிப்பிட்டுள்ளதை விட அதிக நபர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் கிடைத்ததால் அனுமதி மறுப்பு என போலீசார் தெரிவித்திருந்தனர். மேலும் புத்தாண்டு தினத்திற்கு அதிகமான போலீசார் பாதுகாப்புக்கு அனுப்பப்படுவதால், பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த வந்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். இதேபோல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிர், இளைஞர் மற்றும் மாணவர் பாசறை பொறுப்பாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை செய்யப்பட்டார். சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி என்னை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. தேவையற்ற ஒடுக்குமுறையாக எனது கைது நடவடிக்கையை பார்க்கிறேன். இதே இடத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால் இன்று மட்டும் கைதுசெய்தது ஏன்? என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சீமான் உள்பட 231 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 231 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

The post வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சீமான் உள்பட 231 பேர் மீது வழக்குப் பதிவு appeared first on Dinakaran.

Tags : Seeman ,Valluwar Fort ,Chennai ,Anna University ,Seaman ,Seiman ,
× RELATED சீமான் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய்...