*நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
க.பரமத்தி : புன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் இருந்து பாலமலை செல்லும் தார்சாலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து குடி தண்ணீர் வீணாகி வருவதை தடுக்க சம்மந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
க.பரமத்தி ஒன்றியம் புன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் இருந்து பாலமலை செல்லும் தார்சாலை வழியாக பல்வேறு ஊராட்சி மற்றும் கிராம புறங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மேல்நிலைநீர் தேக்க தொட்டிகள் மூலம் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மேற்கண்ட வழி தடத்தில் பல்வேறு தெருக்களுக்கு செல்லும் குடிநீர் குழாய் உள்ளது. இதில் ஒரு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது.
இதனால் அந்த இடத்தில் இருந்து தண்ணீர் தார்சாலையோரமாக வீணாகி வருகிறது. இதனால் சேறும் சகதியுமாய் மாறி சுகாதாரக் கேட்டுக்கு வழி வகுக்கும் நிலை உள்ளது. மக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வரும் நிலையில் அதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில் இருக்கும் குடி நீரும் வீணாகி வருவது கண்டு இப்பகுதி பொதுமக்கள் கடும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.
இவ்வாறு குடிநீர் வீணாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், குடிநீர் குழாயை சீரமைக்க கோரியும் சம்மந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்ததாகவும் ஆனால் இதற்கு எந்த பலனும் இல்லை என அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இந்த குடிநீர் குழாயில் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்மந்தப்பட்ட மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இனியாவது கவனம் செலுத்தி குடிநீர் வீணாவதை தடுக்க இந்த குழாயை சீரமைக்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
The post புன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகி வரும் தண்ணீர் appeared first on Dinakaran.