×

ஆற்காடு அருகே கால்வாய் மீது மேம்பால பணிகள்; தேசிய நெடுஞ்சாலை, கோயில்களில் புகுந்த மழைவெள்ளம்: கடும் போக்குவரத்து நெரிசல்


வேலூர்: ஆற்காடு அருகே கால்வாய் மீது மேம்பால பணிகள் நடப்பதால் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோயில்களில் மழைவெள்ளம் புகுந்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ரத்தினகிரி அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் மேம்பாலம் கட்டவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று தற்போது இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதற்காக தற்காலிகமாக இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டது.

இந்த வழியில் தான் அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக அந்த சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக பெய்த மழைக்காரணமாக இன்று காலை அந்த சர்வீஸ் சாலை முழுவதும் மழைநீர் தேங்கியது. அதனால் அந்த வழியாக சென்றுவரும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே தற்காலிக சாலை சீரமைப்பதுடன் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: தொடர் மழையின் காரணமாக பூட்டுத்தாக்கு மற்றும் மேலகுப்பம் பகுதியில் பல இடங்களில் ஊற்று பெருக்கெடுத்துள்ளது. இதனால் மழைநீர் விவசாய நிலங்களில் தேங்கி உள்ளது. முன்பு எல்லாம் இந்த ஊற்று நீர் தேசிய நெடுஞ்சாலை மழைநீர் வடிக்கால் வழியாக பாலாற்று பகுதிக்கு சென்றுவிடும். தற்போது மேம்பாலம் கட்டுவதால் அந்த பகுதி வழியாக சென்றுகொண்டு இருந்த கால்வாய் மூடப்பட்டுள்ளது. இதனால் மழைநீருடன் சேர்ந்து ஊற்று நீர் தேசிய நெடுஞ்சாலையில் புகுந்துள்ளது. இதனால் இருபுறம் சாலைகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது.

அந்த பகுதியில் உள்ள கோயில்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து பணிகள் முடிக்கவும், தற்காலிக சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ஆற்காடு அருகே கால்வாய் மீது மேம்பால பணிகள்; தேசிய நெடுஞ்சாலை, கோயில்களில் புகுந்த மழைவெள்ளம்: கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Andhat ,National Highway ,Vellore ,Adhat ,Ratnagiri ,Ranipettai District Anchad ,Highway ,Dinakaran ,
× RELATED மும்பை -நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரும்புப் பலகை : 50 கார்கள் பஞ்சர்