ஓசூர்: ஓசூர் அருகே மாநில எல்லை பகுதியில், பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியை போலீசார் சுட்டு பிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் மனோஜ், சுனில்(எ) ஹாவேரி. பிரபல ரவுடிகளான இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அடிக்கடி மோதிக் கொண்டனர். இருவர் மீதும், பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், மனோஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, சுனில் தரப்பினர் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து இரண்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான சுனில், அத்திப்பள்ளி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், அத்திப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராகவ் கவுடா தலைமையிலான போலீசார், நேற்று வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுனிலை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பினார். இதையடுத்து, போலீசார் துரத்திச் சென்று ஆனேக்கல் தாலுகா பண்டாபூர் அருகே, மடிவாளம் கிராமத்தில் சுனிலை சுற்றி வளைத்தனர். பின்னர், துப்பாக்கியால் சுட்டு சுனிலை பிடித்தனர். தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு : ஓசூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.