- Pandalur
- சேரன்கோட்டை
- சேரங்கோடு டேண்டி
- சிங்கோனா
- நாற்றங்கால்
- படச்சேரி
- சேரங்கோடு பஜார்
- தட்டம்பாறை
- Ayyankolli
- சேரங்கோடு வனச்சரகம்
- கூடலூர், நீலகிரி
- தின மலர்
பந்தலூர்: சேரங்கோடு பகுதியில் வீடு, கடைகளை சேதப்படுத்திய புல்லட் யானையை வனத்துறையினர் சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் சேரம்பாடி வனச்சரகத்திற்குட்பட்ட சேரங்கோடு டேன்டீ, சிங்கோனா, நர்சரி, படச்சேரி, சேரங்கோடு பஜார், தட்டாம்பாறை, அய்யன்கொல்லி மூலைக்கடை, சேரம்பாடி டேன்டீ உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையால் புல்லட் என்று அழைக்கப்படும் ஆண் யானை கடந்த பல நாட்களாக 40க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதம் செய்துள்ளது. மேலும் கடைகள், ரேசன் கடைகள், விவசாய பயிர்களை சேதம் செய்வதும், கண்ணில்பட்ட வாகனங்களை தாக்குவதும், மக்களை ஆக்ரோஷமாக துரத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லி பாதிரி மூலா பகுதியில் 3 வீடுகளை தாக்கிய புல்லட் யானை அய்யன்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கியது. புல்லட் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வசதியாக சீனிவாசன், விஜய் என்கிற கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த கும்கிகள் உதவியுடன் புல்லட் யானையை பிடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அய்யன்கொல்லி பகுதியில் பதுங்கிய புல்லட் யானை மீது நேற்று மாலை கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தினர். யானை சிறிது தூரம் சென்று நின்ற பின் கும்கி யானை உதவியுடன் புல்லட் யானையின் அருகே சென்று கால்களில் கயிறுகளை கட்டி மரத்தில் கட்டினர். பின்னர் லாரியில் ஏற்றி தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமிற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
The post வீடு, கடைகளை சேதப்படுத்திய புல்லட் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது appeared first on Dinakaran.