ஊத்தங்கரை: மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற போது, ஊத்தங்கரை அருகே சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உள்பட 47 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே எட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள், 3 தனியார் பஸ்களில் நேற்று காலை மேல்மருவத்தூருக்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். 3 பஸ்களும் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன.
தர்மபுரி மாவட்ட எல்லையை தாண்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் பைபாஸ் சாலையில் சென்றபோது, 3 பஸ்களும் மின்னல் வேகத்தில் சென்றது. அதில், கடைசியாக சென்ற பஸ்சை பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த கனகராஜ்(39) என்பவர் ஓட்டிச் சென்றார். துறிஞ்சிப்பட்டி அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தறி கெட்டு ஓடியது. இதனால், பஸ்சில் இருந்த பக்தர்கள் அலறி கூச்சலிட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில், சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்திற்குள் பஸ் பாய்ந்தது. தொடர்ந்து பலமுறை உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பஸ்சில் இருந்த பக்தர்கள் மற்றும் டிரைவர் இடிபாடுகளுக்குள் சிக்கி, படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார், தீயணைப்புதுறையினர் பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில், படுகாயம் அடைந்த சிறுவர்கள் உள்பட 47 பேரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பான காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The post மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றபோது விபத்து 20 அடி பள்ளத்தில் பாய்ந்த தனியார் பஸ்: 47 பேர் படுகாயம் appeared first on Dinakaran.