- Avaniyapuram
- Alanganallur
- பாலமேடு ஜல்லிக்கட்டு
- வாடிப்பட்டி
- தைப் பொங்கல், ஜல்லிக்கட்டு
- மதுரை மாவட்டம்
- பொங்கல்
வாடிப்பட்டி: அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக வாடிப்பட்டி பகுதியில் உள்ள காளைகளுக்கு வாடிவாசலை செயற்கையாக அமைத்து தீவிர பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தை பொங்கல் விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு களை கட்டும். பொங்கலன்று ஜன.14ல் அவனியாபுரம், ஜன.15ல் பாலமேடு, ஜன.16ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து ஜூன் மாதம் வரை தென்மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு போட்டிகளை நடத்துவது வழக்கம்.
குறிப்பாக, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாட்டினரும் ஆர்வமாக பங்கேற்று பார்வையிடுவார்கள். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மதுரை மாவட்டத்தில், பாலமேடு, அலங்காநல்லூர், வாடிபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார ஊர்களில் ஜல்லிக்கட்டு காளைகளை அதிகளவு வளர்த்து வருகின்றனர். இவர்களுக்கு பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தங்களது காளைகளை விளையாட விட வேண்டும். வெற்றிக்கனி பறிக்க வேண்டுமென்பது வாழ்நாள் கனவு.
இதற்காக காளைகளுக்கு நடை, நீச்சல், ஓட்டம் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகின்றனர். மேலும், வாரம் 2 முறை மேட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, மண் குத்துதல் பயிற்சியும் கொடுத்து வருகின்றனர். மேலும் காளைகளுக்கு ஊட்டச்சத்துமிக்க பச்சரிசி, மண்டை வெல்லம், தேங்காய், பொட்டு பருத்தி, சுண்டல், பாதாம்பருப்பு உள்ளிட்ட ஆரோக்கியம் நிறைந்த உணவுகளையும் வழங்கி வருகின்றனர். கடந்த ஆண்டுகளை போல, வரும் 2025ல் நடக்கும் ஜல்லிக்கட்டுகளிலும் தங்களது காளைகள் பங்கேற்று, வெற்றி பெற்று பரிசுகளை பெற்றுத் தரும் என்று நம்பிக்கையுடன், காளைகளை தயார்படுத்தி வருவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து வாடிபட்டியை சேர்ந்த காளை உரிமையாளரான வினோத் கூறுகையில், ‘‘தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்காக எங்களது காளைகளை தயார்படுத்தி வருகிறோம். காளைகளுக்கு காலை, மதியம், மாலை, இரவு என 4 வேளைகளும் போஷாக்கான உணவு வழங்கி வருகிறோம். குறிப்பாக இரவு நேரத்தில் மாடுகளுக்கு இரும்புச்சத்து வழங்கும் வகையில் பேரிச்சம்பழங்களை வழங்கி தயார்படுத்துவதுடன் அடிக்கடி ஜல்லிக்கட்டு காளைகளை மாதிரி வாடிவாசல் அமைத்து அதில் பழக்கி வருகிறோம். மேலும் நீர்நிலைகளுக்கு அழைத்துச் சென்று நீச்சல் பயிற்சி, மண் குத்துதல் பயிற்சி, நடை பயிற்சியும் கொடுத்து வருகிறோம். எப்போதும் எங்களுக்கு பெருமை தேடி தரும் எங்களது ஜல்லிக்கட்டு காளைகள், இந்த ஆண்டும் எங்களுக்கு பெருமையை தேடி தரும் என்ற முழு நம்பிக்கையுடன் ஜல்லிக்கட்டு காளைகளை உற்சாகமாக தயார்படுத்தி வருகிறோம்’’ என்றார்.
*n குழந்தைகள் போலவே காளைகள் வளர்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சிலர், நேற்று மதுரை மாவட்டம், வாடிபட்டிக்கு வந்திருந்தனர். இவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை எப்படி போட்டிக்கு தயார்படுத்துகின்றனர் என்பதனை பார்வையிடுவதற்காக வந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரியை சேர்ந்த கோபி கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை ஆண்டுதோறும் ஆர்வத்துடன் காண வருவோம். அப்போது காளைகள் எப்படி இவ்வளவு எனர்ஜியாக இருக்கின்றன என்பதை அறிய ஆவலாக இருந்தது. அதனை பார்வையிடுவதற்காகவே வாடிப்பட்டி பகுதியை சுற்றி வருகிறோம். இங்கு ஜல்லிக்கட்டு காளைகளை தங்கள் வீட்டு குழந்தைகளை போல அதன் உரிமையாளர்கள் வளர்க்கின்றனர். காளைகளுக்கு அளிக்கும் உணவுகள், பயிற்சிகளை பார்வையிட்டோம். இதனைக்கண்ட எங்களுக்கும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க ஆர்வம் வந்து விட்டது. எங்கள் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வலியுறுத்துவோம்’’ என்றனர்.
The post அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்: ஓட்டம், நீச்சல், மண் குத்துதலுக்கு பயிற்சி appeared first on Dinakaran.