சேலம்: தமிழகத்தில் மகப்பேறு மரணம் கடந்த ஆண்டை விட தற்போது 17 சதவீதம் குறைந்து 39 சதவீதமாக பதிவாகி உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பிரசவங்கள் நடந்து வருகிறது. பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பாதுகாப்பான முறையில் பிரசவசம் நடப்பதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகப்பேறு இறப்பை பொறுத்தவரை பிரசவத்திற்கு முந்தைய ரத்தப்போக்கு, கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு, செப்சிஸ், இருதய நோய், பிறநோய் பாதிப்புகள் காரணமாக உயிரிழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் மகப்பேறு காலத்தில் தாய்மார்கள் உயிரிழப்பை தடுக்கும் வகையில், சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆரம்பசுகாதார நிலையத்தில் அதிக ஆபத்து உள்ள கர்ப்பிணியை மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கர்ப்பிணி பெண்களுக்கு வழக்கமான மகப்பேறு பரிசோதனைகள், தாயின் ஆரோக்கியத்தைக் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தாய் இறப்புக்களுக்கான உயர் ரத்த அழுத்தம், கர்ப்பகால நீரிழிவு முக்கிய காரணிகளாக உள்ளது. மேலும், தாயின் கடந்த கால சிகிச்சை முறைகள், இதய நோய், ரத்தசோகை போன்ற ஆபத்துக்காரணிகள் கண்டறியப்பட்டு அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, ரத்தம் ஏற்றுதல் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை உள்ளிட்டவைகள் தேவைப்படும் பட்சத்தில் அருகில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது. 100 சதவீதம் பாதுகாப்பான முறையில் பிரசவம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை மகப்பேறு உயிரிழப்பு 47.29 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டு 17 சதவீதம் குறைந்து, 39.46 சதவீதமாக பதிவாகி உள்ளது. அதேபோல், கடந்தாண்டு போக்குவரத்து சமயத்தில் இறப்புகள் 15ஆக இருந்த நிலையில், நடப்பாண்டு 6ஆக குறைக்கப்பட்டுள்ளது. மகப்பேறு காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், பிரசவத்திற்கு முன் பல்வேறு ெதாடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதன்மை பராமரிப்பு மையங்கள் 2,286, 2ம் நிலை பராமரிப்பு மையங்கள் 299, 3ம் நிலை பராமரிப்பு 38, 2,500 தனியார் மருத்துவமனைகளில் சரியான வசதிகளை கண்டறிந்து கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரசவ மையங்களில் குழந்தை பிறப்புகள் குறித்து தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் தடையற்ற போக்குவரத்து சேவையை வழங்குவதால், போக்குவரத்து காலத்தில் ஏற்படும் ஆபத்துகள் தவிர்க்கப்பட்டு வருகிறது. குழந்தை பிறப்புக்கு முந்தைய திட்டமிடல் என்பது பெரிய அளவில் உதவி புரிந்து வருகிறது. மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2025ம் ஆண்டில் விலையுயர்ந்த உயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
The post தமிழகத்தில் மகப்பேறு மரணம் கடந்த ஆண்டை விட 17 சதவீதம் குறைந்தது: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.