சென்னை: 2 நாட்கள் பயணமாக தமிழகம் வரவிருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசிய பேச்சால் சர்ச்சை வெடித்தது. அமித்ஷாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, ஆம் அத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், வி.சி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில், அமித்ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் பயணமாக தமிழகம் வரவிருந்தார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். அதாவது வருகிற 27ம் தேதி மாலை அமித்ஷா சென்னை வர விருந்தார். அன்று மாலை தமிழக பாஜ தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார். 28ம் தேதி அமித்ஷா சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு நேற்று புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜ மாவட்ட தலைமை அலுவலகத்தை அவர் திறந்து வைக்க இருந்தார்.
மேலும் அங்கிருந்தபடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, கோவை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கட்சி தலைமை அலுவலகங்களை அவர் திறந்து வைக்க உள்ளதாக முதலில் தகவல் வெளியானது. மேலும் அமித்ஷா அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவும் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகப் பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி முதல் வாரத்தில் அமித்ஷா தமிழகத்திற்கு வருவார் என்று பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அமித்ஷா தமிழகத்திற்கு வரும் அன்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அமித்ஷாவை கண்டித்து போராட்டத்தை அறிவித்திருந்தது. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தமிழ்நாட்டுக்கு 2 நாட்கள் பயணமாக வரவிருந்த அமித்ஷாவின் வருகை திடீர் ரத்து appeared first on Dinakaran.