×

நெல்லை சந்திப்பு பஸ்நிலைய அண்டர் கிரவுண்ட் ‘கார் பார்க்கிங்’கில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை

*வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

நெல்லை : நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள அண்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங்கில் மழை காலத்தில் தண்ணீர் தேங்காத வகையில் நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் புதிய பஸ்நிலையம், சந்திப்பு பஸ்நிலையம், பாளை பஸ்நிலையம், நேரு சிறுவர் கலையரங்கம், பொருட்காட்சி திடலில் வர்த்தக மையம், டவுன், பாளை காய்கறி மார்க்கெட்டுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.

இதுபோல் 4.25 ஏக்கரில் அமைந்துள்ள நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தின் பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.85.56 கோடியில் 5 அடுக்குகளுடன் கூடிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள அண்டர் கிரவுண்டில் கார், பைக்குகள், சைக்கிள்கள் நிறுத்தவும், மேல் பகுதியில் 17 பஸ்களை நிறுத்த பிளாட்பாரங்கள், 3 தளங்களில் 144 கடைகளுடன் கட்டப்பட்டுள்ளன. இதைதொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சந்திப்பு பஸ்நிலையம் திறக்கப்பட்டது.

ஆனால் பெருமழை காலத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது சந்திப்பு பஸ்நிலையத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை தொடர்கிறது. கடந்தாண்டு டிசம்பரில் பெய்த கனமழையிலும், கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த தொடர் மழை காரணமாகவும் சந்திப்பு பஸ்நிலையம் பகுதியில் அண்டர் கிரவுண்ட்டில் அமைக்கப்பட்டுள்ள கார்பார்க்கிங் பகுதியில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது.

கனமழை காலத்தில் கார்பார்க்கிங் பகுதியில் தேங்கிய தண்ணீரை மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. இதனால் கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே மழைநீர் வடிகால் ஓடைகள் மூலம் தண்ணீர் வழிந்தோட நிரந்தர தீர்வு காணவேண்டும்.

கடந்த மழை காலங்களில் கார் பார்க்கிங் செயல்படாததால் சேதம் இல்லை. விரைவில் பார்க்கிங் செயல்படும் போது கார்கள், பைக்குகள் நிறுத்தப்படும் நிலையில் கனமழையால் அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் பகுதியில் தண்ணீர் தேங்கும் போது வாகனங்கள் சேதமடையும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க சந்திப்பு பஸ்நிலையத்தை சுற்றிலும் மழைநீர் தேங்காத வகையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டங்கள் தீட்ட வேண்டும்.

மழைநீர் வடிகால் ஓடைகள் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும். சந்திப்பு பஸ்நிலையத்தின் அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் பகுதிக்குள் தண்ணீர் நுழையாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மழைநீர் ஓடையை சீரமைக்க வேண்டும்

கடந்த இரு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் சந்திப்பு பஸ்நிலையத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பு மழைநீர் வடிகால் ஓடைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து அகற்றி தண்ணீர் செல்ல வழிவகை ஏற்படுத்தப்பட்டது. இந்த மழைநீர் வடிகால் ஓடையை நிரந்தரமாக மழைகாலத்தில் தண்ணீர் தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post நெல்லை சந்திப்பு பஸ்நிலைய அண்டர் கிரவுண்ட் ‘கார் பார்க்கிங்’கில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nellai Junction Bus Station ,Nellai ,Smart City ,Nellai… ,Dinakaran ,
× RELATED ப்ரி பையர் விளையாட்டில் தகராறு பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது