×

பட்டியலின மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் கொடுமைகள் நடப்பது போன்று பொய் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி: காங்கிரஸ் எஸ்சி பிரிவு கடும் கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: பட்டியலின மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் கொடுமைகள் நிகழ்த்தப்படுவது போன்ற பொய் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. கடந்த ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் மூடி மறைக்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் அதிக நடமாட்டம் இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க சிலர் வேண்டுமென்றே முயல்கிறார்கள். போதைப் பொருட்கள் கடத்தலின் தலைநகரம் என்ற பெயரை குஜராத் மாநிலம் தான் இன்றைக்கும் தக்க வைத்திருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் போதை ஒழிப்பு நடவடிக்கையை நேரடியாகத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அமைதியான மாநிலமாகவும், சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை இல்லாத மாநிலமாகவும் இருப்பதால் தான், வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். நிலைமை இப்படியிருக்க, அனைவருக்குமான அரசாக செயல்படும் திராவிட மாடல் அரசுக்கு எதிராக பாஜவின் குரலை சிலர் இங்கு பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பழுக்கற்ற அரசுக்கு எதிராக அவதூறுகள் தொடர்ந்தால், தமிழ்நாட்டில் பாஜவுக்கு ஏற்பட்ட நிலைமை தான் இவர்களுக்கும் ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

The post பட்டியலின மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் கொடுமைகள் நடப்பது போன்று பொய் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி: காங்கிரஸ் எஸ்சி பிரிவு கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Congress SC ,Chennai ,Congress S. C. Division ,Head of State ,M. B. Ranjan Kumar ,Congress SC Division ,Dinakaran ,
× RELATED போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில்...