சென்னை: சென்னை-நெல்லை இடையே ரயில் பயண நேரம் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. புதிதாக ரயில்வே கால அட்டவணைவெளியிடப்பட்டுள்ளது. இதில் நெல்லை – சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் கால அட்டவணைமாற்றியமைக்கப்பட்டுள்ளது. நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் மற்றும் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னையில் இருந்து தினந்தோறும் இயக்கப்படும் சென்னை – நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் – 12631) இரவு 8.10 மணிக்கு புறப்படுகிறது.
மறுநாள் காலை 6.40 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்தை அடையும். இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில் வழக்கமாக புறப்படும் நேரத்தை விட அரை மணி நேரம் தாமதமாக இரவு 8.40 மணிக்கு புறப்படும். ஆனால் வேகம் அதிகரிப்பு காரணமாக நெல்லை ரயில் நிலையத்தை சென்று அடையும் நேரம் மாற்றமில்லை. வழக்கமான 6.40 மணிக்கு சென்றடைந்துவிடும். மறுமார்க்கத்தில் (வண்டி எண் 12632) நெல்லையில் இருந்து சென்னைக்கு இரவு 8.05 மணிக்கு ரயில் புறப்படுகிறது.
சென்னை எக்மோர் ரயில் நிலையத்தை மறுநாள் காலை 7 மணிக்கு சென்றடையும். இந்த ரயிலும் வழக்கமாக செல்லும் நேரத்திற்கு பதிலாக 35 நிமிடம் தாமதமாக 8.40 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். எழும்பூர் ரயில் நிலையத்தை வழக்கம்போல் மறுநாள் காலை 7 மணிக்கு சென்றடையும். பயண நேரம் குறைக்கப்பட்டு வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 30 நிமிடம் முதல் 35 நிமிடங்கள் வரை பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புறப்படும் நேரத்தை குறைத்து, பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post சென்னை – நெல்லை இடையே ரயில் பயண நேரம் 30 நிமிடம் குறைப்பு: வேகம் அதிகரிப்பால் பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.