சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து கடலில் படிப்படியாக வலுவிழக்கும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 27ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென் மண்டல தலைவர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிவிப்பு: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், விசாகபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும், கோபல்பூரிற்கு (ஒரிசா) தெற்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது, அடுத்த 12 மணி நேரத்தில், கிழக்கு-வடகிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, கடலில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 23ம் தேதி(நாளை) முதல் 27ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்று வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சந்தியூர் 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து கடலில் படிப்படியாக வலுவிழக்கும்: இன்று முதல் 27ம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.