×

விவாகரத்து கோரிய வழக்கில் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச வேண்டும்: சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி தம்பதி சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இருவரும் சமரச மையத்தில் 1 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி நேரில் ஆஜராகினர். அப்போது, மத்தியஸ்தர் நேரில் ஆஜராகி, இன்னும் சமரச பேச்சுவார்த்தை முடியவில்லை என தெரிவித்தார். இதையடுத்து, சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேசும்படி ஜெயம்ரவி மற்றும் ஆர்த்திக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post விவாகரத்து கோரிய வழக்கில் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச வேண்டும்: சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Jayam Ravi ,Aarthi ,Chennai Family Court ,Chennai ,
× RELATED ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியர் இடையே...