×

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி 3 மாவட்டங்களில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்து டிஜிபி ஆய்வு

விழுப்புரம், டிச. 21: விழுப்புரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைபொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கவும், இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்பிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று எஸ்பி அலுவலகங்களில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி விழுப்புரம் காவல் சரகத்திற்குட்பட்ட கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்ட காவல்துறை உயர்அதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு தொடர்பான ஆலோசனை மற்றும் மதிப்பாய்வு கூட்டம் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு 10 மணியளவில் விழுப்புரம் வந்தார். எஸ்பி அலுவலகத்தில் ஆட்சியர் பழனி மற்றும் காவல்துறை அதிகாாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மதிப்பாய்வு கூட்டம் டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில் நடந்தது. வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க், டிஐஜி திஷா மிட்டல், எஸ்பிக்கள் தீபக்சிவாச் (விழுப்புரம்), செந்தில்குமார் (கடலூர்), ரஜித்சதுர்வேதி (கள்ளக்குறிச்சி) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகள் போன்ற முக்கியமான பிரச்சனைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் ரவுடியிசத்தை கட்டுப்படுத்தவும், ஜாதி மற்றும் வகுப்புவாத பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும், குற்றங்களை கண்டறிதல் மற்றும் குற்றதடுப்பு நடவடிக்கைகள், இணையவழி குற்றங்கள் தடுத்தல், சாலை விபத்துக்களை தடுத்தல், விழிப்புணர்வு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும் அருகில் புதுச்சேரி மாநிலம் இருப்பதால் சாராயம், மதுகடத்தலை தடுப்பது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வனப்பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பு குறித்து தொடர்ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது. மீண்டும் மலைகிராமங்களில் சாராயம் காய்ச்சுதல், விற்பனை நடைபெறாமல் தடுத்தல், கடலூர் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் நல்லுறவை மேம்படுத்துதல் குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவுகளை பிறப்பித்தார்.

குறிப்பாக விழுப்புரம் காவல் சரகத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கவும், இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதில் கவனம் செலுத்தவும், குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொருளாதார விசாரணை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். அந்த குற்றவாளிகளின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்குவது தொடர்பான நடவடிக்கைகளில் அதிககவனம் செலுத்த அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். 2வதுநாளாக இன்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்கிறார்.

The post விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி 3 மாவட்டங்களில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்து டிஜிபி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : TGB ,Districts ,Viluppuram ,Cuddalur ,Kalkakurichi ,TGB Study on ,Order Protection ,Viluppuram, ,Cuddalore ,Kalalakurichi ,
× RELATED தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7...