×

பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கை 192.984 கிலோ தங்கம் வங்கியில் ஒப்படைப்பு: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 192.984 கிராம் தங்க நகைகள், மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் உருக்கு ஆலைக்கு தங்கக்கட்டிகளாக மாற்றுவதற்காக எஸ்பிஐ வங்கி மூலம் நேற்று எடுத்து செல்லப்பட்டது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர், ஓய்வு நீதிபதி மாலா முன்னிலையில் அதனை எஸ்பிஐ வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அப்போது நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், முதற்கட்டமாக 13 கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களை உருக்கி 442.107 கிலோ எடை உள்ள சுத்த தங்கக்கட்டிகள் எஸ்பிஐ வங்கியின் தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.5.79 கோடி வட்டி தொகை பெற்று அந்தந்த கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக சுமார் 1,000 கிலோ எடை கொண்ட பலமாற்று பொன் இனங்களை உருக்கி தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யும்போது ஆண்டிற்கு ரூ.12 கோடி வட்டி தொகையாக கிடைக்கும் என்றார்.

* பழநி ரோப் கார் வடிவமைப்பு மலேசியா, ஜப்பானில் ஆய்வு
அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ‘‘பழநி கோயிலிலுள்ள காலி பணியிடங்கள் மார்ச் இறுதிக்குள் நிரப்பப்படும். இந்திய வனத்துறை பாதுகாப்பு சட்டப்படி புதிதாக யானையை வாங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. அனைத்து அனுமதிகளையும் பெற்று சொந்த பராமரிப்பில் யானைகளை வளர்த்து வருபவர்கள் கோயிலுக்கு யானை வழங்க முன்வந்தால் சட்டப்படி அதனை ஏற்க துறை தயாராக உள்ளது. பழநி கோயிலுக்கு புதிய ரோப்கார் அமைப்பது தொடர்பாக அறங்காவலர் குழுவினர் மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்று அங்கு இயக்கப்படும் ரோப்கார் கட்டமைப்புகளை ஆய்வு செய்து வந்துள்ளனர். அதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு தமிழ்நாடு முதல்வரின் அனுமதி பெற்று அறிவிக்கப்படும்’’ என்றார்.

The post பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கை 192.984 கிலோ தங்கம் வங்கியில் ஒப்படைப்பு: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Palani Hill Temple ,Minister ,Sekarbabu ,Palani ,Palani Thandayutapani Swamy Temple ,Dindigul district ,Union Government Steel Plant ,Mumbai ,SBI Bank ,Dinakaran ,
× RELATED பழநி மலைக்கோயிலில் கார்த்திகை தீபத்...