×

அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு அமித்ஷா பதவி விலக கோரி சென்னையில் 75 இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் : சிந்தாதிரிப்பேட்டையில் அமித்ஷா உருவப்படம் எரிப்பு

சென்னை: அம்பேத்கர் குறித்து சர்ச்சையான வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி சென்னையில் 75 இடங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமித்ஷாவின் உருவப்படத்தை கொளுத்தியும், கிழித்தெறிந்தும் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீது நடைபெற்ற சிறப்பு விவாதத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, ‘ அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவது தற்போது பேஷனாகி விட்டது. இந்த அளவுக்கு கடவுளின் பெயரை கூறி இருந்தால் 7 பிறவிகளிலும் சொர்க்கத்தை அடையலாம்’ என்று தெரிவித்த கருத்து எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னையிலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை வகித்தார்.

இதில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், திமுக தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் எழிலன், மாவட்ட செயலாளர் சிற்றரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சைதை கிழக்கு பகுதி திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்படி மண்டல குழு தலைவர் துரைராஜ் தலைமையில் வேளச்சேரி 100 அடி சாலை கீதம் உணவகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்மேற்கு மாவட்ட திமுக சார்பாக மாவட்டச் செயலாளர் மயிலை த. வேலு எம்எல்ஏ தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏ ஜெ.கருணாநிதி, பகுதி செயலாளர்கள் கே‌.ஏழுமலை, நந்தனம் மதி, முரளி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜா அன்பழகன் மாவட்டத் துணைச் செயலாளர் மலர், தலைமை செயற்குழு உறுப்பினர் கோசு மணி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் லயன் பி.சக்திவேல் மற்றும் மாவட்ட பகுதி வட்ட வட்ட செயலாளர், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோன்று, ஓட்டேரி மேம்பாலம் அருகில் மேயர் பிரியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிந்தாதிரிப்பேட்டையில் மாநகராட்சி திமுக மண்டல குழு தலைவர் சேப்பாக்கம் மதன்மோகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷாவின் உருவப்படத்தை கேலி சித்திரம் போன்று சித்தரித்து திமுகவினர் எடுத்து வந்தனர்.

மேலும் அமித்ஷாவின் உருவப்படத்தை கிழித்தெறிந்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். வடசென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 16 இடங்களிலும், சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 26 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் உள்ள 5 திமுக மாவட்டங்கள் சார்பில் மொத்தம் 75 இடங்களில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு அமித்ஷா பதவி விலக கோரி சென்னையில் 75 இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் : சிந்தாதிரிப்பேட்டையில் அமித்ஷா உருவப்படம் எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Chennai ,Amitsha ,Sindathiripetta ,Union Minister ,Sindathripetta ,
× RELATED நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து...