×

திருச்சியில் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதி: அரசு ஆணை

சென்னை: திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்காக ரூ.290 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணையிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த ஜூன் 27ம் தேதி 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் ‘‘காவிரிக் கரையில் அமைந்து மாநகரமான திருச்சியில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்’’ என்று ெதரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பொது நூலகத்துறையின் இயக்குநர், திருச்சி மாவட்டத்தில் செங்குளம் கிராமம், கோ.அபிஷேகபுரம் கிராமம் ஆகியவற்றில் ரூ.230 கோடி மதிப்பில் நூலகம் கட்டுவதற்கு பொதுப் பணித்துறையிடம் இருந்து விரிவான திட்டமதிப்பீடு மற்றும் வரைபடம் பெறப்பட்டுள்ளது.

இந்த நூலகத்துக்கு தேவையான நூல்கள் மற்றும் மின் நூல்கள் ரூ.50 கோடி மதிப்பிலும், தொழில் நுட்ப சாதனங்கள் ரூ.5 கோடி மதிப்பிலும், ஆக மொத்தம் ரூ.290 கோடி மதிப்பில் நூலகம் அமைப்பதற்கு முன்பணம் பெற்று செலவினம் மேற்கொள்ள நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்க அரசுக்கு கடிதம் எழுதி கேட்டுள்ளார். பொது நூலகத்துறையின் இயக்குநரின் கருத்துருவை கவனமுடன் பரிசீலனை செய்த அரசு, அதை ஏற்று, மேற்படி திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு வட்டம் செங்குளம் கிராமம், மேற்கு வட்டம் அபிசேஷபுரம் கிராமம் ஆகியவற்றில் 18333 சதுர மீட்டர் அளவில் ரூ.290 கோடி மதிப்பில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க முடிவு செய்து நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருச்சியில் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதி: அரசு ஆணை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Chennai ,School Education Secretary ,Madhumati ,Tamil Nadu Legislative Assembly… ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...