வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை சீசன் காலமாகும். இந்தாண்டு வடகிழக்கு பருவ மழையால் நீர்நிலைகள் நிரம்பி பறவைகள் வருவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவியதால் ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 290 வகையான லட்சக்கணக்கான பறவைகள் அக்டோபர் மாதம் துவக்கத்தில் இருந்தே வர துவங்கியது.
ரஷ்யா, ஈராக்கில் இருந்து கடல் ஆலா, இலங்கையில் இருந்து பூநாரை மற்றும் கரண்டி மூக்குநாரை, சைபீரியாவில் இருந்து உள்ளான் வகையை சேர்ந்த பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், கடல் காகம் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் லட்சக்கணக்கில் வந்து குவிந்தன. ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பறவைகளை பார்த்து ரசித்து சென்றனர்.
இந்தநிலையில் கோடியக்கரையில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. 40 செமீ வரை மழை பெய்ததால் கோடியக்கரையில் உள்ள காடுகள் மற்றும் சரணாலயம் பகுதியில் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பறவைகள் தங்க போதிய இடம் இல்லை. இரை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் 50 சதவீத பறவைகள் சரணாலயத்தை விட்டு வேறு இடத்துக்கு சென்று விட்டன. கோடியக்கரையில் தேங்கி நிற்கும் தண்ணீர் வற்றியவுடன் மீண்டும் 2 வாரங்களில் வெளிநாட்டு பறவைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
கடந்த 2 மாதமாக பறவைகள் வரத்து அதிகரித்து அழகாக காட்சியளித்த கோடியக்கரை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. கோடியக்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
The post மழை நீர் தேங்கியதால் தங்க இடமில்லை; கோடியக்கரையில் இருந்து இடம் பெயர்ந்த பறவைகள்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.