×

தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது; கெஜ்ரிவால் எதிர்ப்பு

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகம் முன்பு டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முதல்வர் அதிஷி, மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்பட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ‘அமித்ஷாவின் கருத்து நாட்டிலுள்ள கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது. அதே வேளையில் பிரதமர் மோடி, அமித்ஷாவை ஆதரித்த விதம், அவர் நாடாளுமன்றத்தில் பேசியது பாஜவின் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்று தெரிகிறது. அமித்ஷா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதனால் மக்களின் கோபம் முற்றிலும் மறைந்துவிடாது என்றாலும் குறையும். இந்த விஷயத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்து செல்வோம். பாஜவின் உயர்மட்ட தலைமை, அம்பேத்கரை எப்படி அவமதித்துள்ளது என்பதை அம்பலப்படுத்துவோம். டெல்லியிலும், நாடு முழுவதிலும், நமது அரசியலமைப்பு சட்டத்தின் சிற்பியை பாஜ எப்படி அவமதிக்கிறது என்பதை மக்கள் அறிந்திருப்பதை உறுதி செய்வோம். இந்த கருத்துகளை வன்மையாக கண்டிக்கிறோம். மில்லியன் கணக்கானவர்கள் உணரும் வலியில் பங்கு கொள்கிறோம்’ என்றார்.

The post தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது; கெஜ்ரிவால் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Gejriwal ,NEW DELHI ,AMADMI ,DELHI ,MINISTER ,ARVIND KEJRIWAL ,UNION ,AMITSHA ,BAJA HEAD ,Adashi ,Manish Sisodia ,Sanjay ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...