×

பெரியபாளையம் பஸ் நிலையம் விரிவாக்கம்; ஆக்கிரமிப்பு இடங்களை அளவீடு செய்யும் பணி தொடக்கம்

ஊத்துக்கோட்டை: தினகரன் நாளிதழ் செய்தி எதிரொலியால், பெரியபாளையம் பஸ் நிலையத்தை விரிவுப்படுத்த அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பெரியபாளையம் ஊராட்சியில், விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ-மாணவிகள் என 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மேலும், இங்கு புகழ் பெற்ற பவானி அம்மன் கோயில் அமைந்துள்ளதால், இக்கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா என பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களிலிருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.

இவர்களின் வசதிக்காகவும், பெரியபாளையத்தை சுற்றி ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், தும்பாக்கம், தண்டலம், ஏனம்பாக்கம், கல்பட்டு என 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வேலை, வியாபாரம், படிப்பு சம்மந்தமாகவும், பெரியபாளையம் பஸ் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சென்னை, திருப்பெருமந்தூர், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வார்கள். இவர்களின் வசதிக்காகவும், செங்குன்றம், மாதவரம், ஆவடி மற்றும் ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பொன்னேரி போன்ற போக்குவரத்து பனிமனைகளிலிருந்து தினமும் 50க்கும் மேற்பட்ட மாநகர மற்றும் விழுப்புரம் கோட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த, பஸ்கள் அனைத்தும் பெரியபாளையம் பஸ் நிலையத்திற்கு வெளியே நின்று செல்கிறது.

இந்த பெரியபாளையம் பஸ் நிலையம் கட்டுவதற்காக 1957ம் ஆண்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணப்ப முதலியார் என்பவர் 1.8 ஏக்கர் நிலத்தை கொடுத்தார். அதன்படி, பெரியபாளையம் பஸ் நிலையம் கட்டுவதற்காக கடந்த 2002-2003ம் ஆண்டு அப்போதைய திமுக எம்பி ஆ.கிருஷ்ணசாமி நிதியிலிருந்து ₹10 லட்சம் செலவில் பஸ் நிலையம் கட்டப்பட்டது. தற்போது இந்த இடத்தில் 30 செண்ட் மட்டுமே பஸ் நிலையம் உள்ளது. மீதமுள்ள இடம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால், பஸ் நிலையம் குறுகிய அளவே உள்ளதால் 4 பஸ்களுக்கு மேல் பஸ் நிலையத்திற்கு உள்ளே வரமுடியவில்லை. அப்படி பஸ்கள் வந்தாலும் மிகவும் நெருக்கடியாக உள்ளது. எனவே, பெரியபாளையம் பஸ் நிலையத்தை விரிவுப்படுத்த வேண்டும் எனவும், இது குறித்து அப்பகுதி மக்கள் முதல்வர் தனி பிரிவிற்கும், திருவள்ளூர் கலெக்டருக்கும் கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர். கிராம சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளனர்.

எனவே, பெரியபாளையம் பஸ் நிலையத்தை விரிவுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து, பெலியபாளையம் பேருந்து நிலையத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று தினகரன் நாளிதழில் கடந்த நவம்பர் மாதம் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக, நேற்று ஊத்துக்கோட்டை வருவாய் துறையினர் சார்பில் தாசில்தார் மதன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் ஞான சவுந்தரி, பிடிஒ குமார், வருவாய் ஆய்வாளர் கீதா, விஏஒ வேலாயுதம், ஊராட்சி செயலாளர் குமரவேல் ஆகியோர் போலிஸ் பாதுகாப்புடன் பஸ் நிலையத்தையும் ஆக்கிரமிப்பு இடத்தையும் அளவீடு செய்தனர்.

The post பெரியபாளையம் பஸ் நிலையம் விரிவாக்கம்; ஆக்கிரமிப்பு இடங்களை அளவீடு செய்யும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Beriapaliam Bus Station ,Pothukottai ,Dhinakaran ,Beriapaliam Uratchi ,
× RELATED பெரியபாளையம் அருகே ஆற்றங்கரையில்...