×

தாம்பரம் மாநகராட்சியில் ரூ.1.10 கோடியில் 4 குடிநீர் லாரிகள்: மேயர் தொடங்கி வைத்தார்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 70 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஒவ்வொரு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளிலும் குடிநீர் வழங்கும் வகையில் தெரு குழாய்கள், நீர்த்தேக்க தொட்டிகள், தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதற்கு போதிய லாரிகள் இல்லாததால் புதிய தண்ணீர் லாரிகள் வாங்க திட்டமிடப்பட்டது.

அதன்படி தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.1.10 கோடியில் தலா 9000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 தண்ணீர் லாரிகள் புதிதாக வாங்கப்பட்டது. இவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் பங்கேற்று, கொடியசைத்து தண்ணீர் லாரிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மண்டல குழு தலைவர்கள் வே.கருணாநிதி, ச.ஜெயபிரதீப், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் குப்பை அகற்ற சிறிய அளவிலான ஸ்கிட் ஸ்டீர் லோடேர் வாகனம் தேவைப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் 5 ஸ்கிட் ஸ்டீர் லோடேர் வாகனங்கள் தாம்பரம் மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.

ஆனால் இதுவரை எந்த ஒரு மண்டலத்திற்கும் அந்த வாகனங்கள் வழங்காமல், பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த வாகனங்களுக்கு ஓட்டுநரை நியமித்து அந்தந்த மண்டல பகுதிகளில் தூய்மை பணியில் மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தாம்பரம் மாநகராட்சியில் ரூ.1.10 கோடியில் 4 குடிநீர் லாரிகள்: மேயர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Mayor ,Tambaram ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் தீவிர தூய்மை பணி: மேயர் தொடங்கி வைத்தார்