×

பழனி தண்டாயுதபாணி கோயிலில் 58 ஏக்கரில் அடிப்படை வசதிகள் செய்ய முடிவு: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை

சென்னை: பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திகழும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இரண்டாம் கட்ட பெருந்திட்ட வரைவிற்காக 58.75 ஏக்கர் நிலம் வருவாய் துறையின் மூலம் திருக்கோயில் நிர்வாகத்திற்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்த இடத்தில் பக்தர்களின் வசதிக்காக மேம்படுத்த இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. எனவே அந்த பணிகள் குறித்து சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 58.75 ஏக்கர் நிலப்பரப்பில் பக்தர்களுக்கான தங்கும் அறைகள், பொருட்கள் பாதுகாப்பு அறை, உணவகங்கள், பூங்காக்கள், முடிகாணிக்கை மண்டபம், நீருற்றுகள், சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா, முருகனின் பெருமைகளை பறைசாற்றும் ஆன்மிக அருங்காட்சியகம், கலையரங்கம், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற வசதிகளை உள்ளடக்கியதாக அமைக்க வேண்டும். அதற்கேற்றார்போல் வடிவமைப்புகளை உருவாக்கி திட்டமதிப்பீட்டினை விரைந்து தயாரித்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுரைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சுகுமார், திருமகள், ஹரிப்ரியா, தலைமைப்பொறியாளர் பொ.பெரியசாமி, இணை ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பழனி தண்டாயுதபாணி கோயிலில் 58 ஏக்கரில் அடிப்படை வசதிகள் செய்ய முடிவு: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Palani Thandayutapani Temple ,Minister ,Sekarbabu ,Chennai ,Palani ,Thandayutapani ,Swamy Temple ,Palani Thandayutapani Swamy Temple ,Temple ,Dinakaran ,
× RELATED பழனி தண்டாயுதபாணி கோயில் 2ம் கட்ட...