சென்னை: சென்னை ஐ.ஐ.டியில் அடுத்த கல்வியாண்டு (2025-26) முதல் கலை, கலாசாரத் துறையில் சிறந்து விளங்கக் கூடிய மாணவ-மாணவிகளுக்காக சிறப்பு இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி நேற்று வெளியிட்டார். சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக் மற்றும் பி.எஸ். போன்ற இளநிலை பாடத் திட்டங்களான விண்வெளி, உயிரியியல், வேதியியல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என்ஜினியரிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு, என்ஜினியரிங் டிசைன், மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்பட 14 பாடத் திட்டங்களில் ஒவ்வொரு பாடத்திட்டத்துக்கும் தலா 2 இடங்கள் வீதம் மொத்தம் 34 இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் கலை, கலாசாரத்துறையில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகள் சேர முடியும். இதில் சேருவதற்கு ஜே.இ.இ. அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்று இருக்க வேண்டும். மேலும், பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கர் விருது, தேசிய பால் ஸ்ரீ ஹானர், தேசிய இளைஞர் விருது, உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கர் விருது, அகில இந்திய வானொலி அல்லது தூர்தர்ஷனில் பி கிரேடு சான்றிதழ், எம்பேனல்டு ஆர்டிஸ்ட்ஸ், இளம் கலைஞர்களுக்கான உதவித்தொகை விருது, தேசிய இளைஞர் விழா போட்டி விருது, கலாசாரத் திறமை தேடல் உதவித்தொகை விருது ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பெற்றிருக்க வேண்டும்.
இதில் ஒவ்வொன்றுக்கு தனி மதிப்பெண் இருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த மாணவர் சேர்க்கைக்கு தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஐ.ஐ.டி.யில் வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித் தொகையும் இவர்களுக்கும் கிடைக்கும். இதற்கான விண்ணப்பப் பதிவு https://jeeadv.iitm.ac.in/face என்ற இணையதளத்தில் அடுத்த ஆண்டு (2025) ஜூன் மாதம் 2ம் தேதி தொடங்கி 8ம் தேதி நிறைவு பெறும். சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரையில் நடக்கிறது. 13ம் தேதி தகுதியானவர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்படும். 14ம் தேதி அன்று முதல் சுற்று மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.
The post கலை, கலாசாரத் துறை மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் முதல்முறையாக சிறப்பு இடஒதுக்கீடு: இயக்குநர் காமகோடி தகவல் appeared first on Dinakaran.