- பழனி தண்டாயுதபாணி கோவில்
- சென்னை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தண்டாயுதபாணி சுவாமி கோவில்
- பழனி
- இந்து மதம்
- மதம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்
- பி.கே.சேகர்பாபு
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று ஆணையர் அலுவலகத்தில் பழனி, தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையில் செயல்படுத்தப்படும் பெருந்திட்ட வரைவு – 2 (Master Plan – Phase 2) குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திகழும் பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இத்திருக்கோயிலில் திருப்பணிகள், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்திடும் வகையில் ரூ.99.98 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 27.01.2023 அன்று குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பெருந்திட்ட வரைவிற்காக 58.75 ஏக்கர் நிலம் வருவாய் துறையின் மூலம் திருக்கோயில் நிர்வாகத்திற்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்த இடத்தில் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இரண்டாம் கட்ட பெருந்திட்ட வரைவானது செயல்படுத்தப்பட உள்ள 58.75 ஏக்கர் நிலப்பரப்பில் பக்தர்களுக்கான தங்கும் அறைகள், பொருட்கள் பாதுகாப்பு அறை, உணவகங்கள், பூங்காக்கள், முடிகாணிக்கை மண்டபம், நீரூற்றுகள், சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா, முருகனின் பெருமைகளை பறைசாற்றும் ஆன்மிக அருங்காட்சியகம், கலையரங்கம், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற வசதிகளை உள்ளடக்கியதாக அமைந்திட வேண்டும். அதற்கேற்றார்போல் வடிவமைப்புகளை உருவாக்கி திட்டமதிப்பீட்டினை விரைந்து தயாரித்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் ரா.சுகுமார், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, தலைமைப்பொறியாளர் பொ.பெரியசாமி, இணை ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post பழனி தண்டாயுதபாணி கோயில் 2ம் கட்ட பெருந்திட்ட வரைவிற்கான கலந்தாய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.