×

முதலில் தலைமுடி காணிக்கை செய்த நீளாதேவி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடிகளை குவிக்கும் கருப்பு தங்கம்

* ஆண்டுக்கு ஒரு கோடி பக்தர்கள் காணிக்கை
* இத்தாலி, பிரான்ஸ் நாடுகளுக்கு முடி ஏலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடிகளை குவிக்கும் கருப்பு தங்கமாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவிக்கிறது. ஆண்டுக்கு ஒரு பக்தர்கள் வரையில் முடி காணிக்கை செலுத்துகின்றனர். இத்தாலி, பிரான்ஸ் நாடுகளுக்கு முடி ஏலம் விடப்படுகிறது. புராணங்களில் படி பிருகு என்ற முனிவர் விரைவில் கோபம் கொள்ளும் குணத்திற்கும் பெயர் பெற்றவர். ஒருநாள் மகா விஷ்ணுவைச் வைகுண்டத்தில் சந்திக்க பிருகு முனிவர் சென்றார். முனிவர் வருவதை அறிந்தாலும் மகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் கால்களை அழுத்தி விடும்போது, உறங்குவதுமாக இருந்தார். ஆனால் தான் வருவதை கூட அறியாமல் மகாவிஷ்ணு தூங்குவதைக் கண்ட பிருகு முனிவர் இதை அவமானமாகக் கருதி, மகாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்துள்ளார். பின்னர் விஷ்ணு உறக்கத்திலிருந்து விழித்து பிருகு முனிவர் காலில் காயம் ஏற்பட்டதா? என்று நலம் விசாரித்து பிருகு முனிவரின் பாதத்தை பிடித்து விட்டார்.

இதனால் தான் செய்த தவறை உணர்ந்த பிருகு முனிவர் நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்புக் கேட்டு சென்றார். ஆனால் விஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி, கணவரின் செயலை கண்டு கோபமடைந்தார். இதற்கு ஒரு குழந்தை தன் மார்பில் எட்டி உதைத்தால் தந்தைக்கு கோபம் வருமா? என்று விஷ்ணு விளக்க மளித்துள்ளார். ஆனால் மார்பில் லட்சுமியாகிய எனக்கு இடம் கொடுத்துள்ள நீங்கள், பிருகு முனிவர் எட்டி உதைத்தால் அவர் பாதத்தை பிடித்து விடுகிறீர்களா என்று கோபப்பட்டு நான் இல்லை என்றால் நீங்கள் ஒன்று இல்லை என்பதை உணர்த்த லட்சுமி பூலோகம் வந்துவிடுகிறார். விஷ்ணுவும், லட்சுமியை தேடி பூலோகம் வருகிறார். பூலோகத்தில் சீனிவாசனாக லட்சுமியை தேடி தற்போதைய திருப்பதியில் உள்ள சேஷாச்சல மலையில் வந்து லட்சுமியை தேடி அங்கேயே தங்கி சோர்வடைகிறார்.

சீனிவாசன் உடல் சுற்றி எறும்புகள் புற்று கட்டிய நிலையில், மேய்ச்சலுக்காக வரும் பசுக்களில் ஒன்று தினமும் இந்த மண் மேட்டிற்கு வந்து புற்றில் உள்ள சீனிவாசனுக்கு தானாக பாலை சுரந்து வழங்கி சென்றது. இதை கண்டு கோபமடைந்த மாட்டின் உரிமையாளர் புற்றை கோடாரியால் தாக்குகிறார். இதில் சீனிவாசன் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. தலையில் இருந்து ரத்தம் வழிந்து ஒரு இடத்தில் இருந்து முடி உதிர்ந்தது. சீனிவாசன் திருமேனியில் ரத்தம் வழிவதைக் கண்ட கந்தர்வ இளவரசி நீளாதேவி காயத்திற்கு மருந்திட்டார். பெருமாளின் தலையில் காயத்தால் தலைமுடி விழுந்த இடத்தில் தன்னுடைய தலைமுடியை கத்தரித்து அந்த முடியை வைத்து சரியாக்கினார். தன்னுடைய அழகை காப்பதற்கு அவரது முடியை கொடுத்த நீளா தேவியின் அன்பைக் கண்டு நெகிழ்ந்து போனார் சீனிவாசன்.

இந்த கலியுகத்தில் எவர் ஒருவர் தனது முடியைக் காணிக்கை அளித்து வேண்டிக்கொண்டாலும் அந்த வேண்டுதலை நிறைவேற்றுவேன் என்று சினிவாசன் வாக்களித்தாராம். காணிக்கையாக அளிக்கப்படும் முடி யாவும் நீளாதேவிக்கே அர்ப்பணமாகட்டும் என்று அருளினார். இதற்கிடையே ஆகாச ராஜாவிற்கு தோட்டத்தில் லட்சுமி குழந்தையாக கிடைக்க அதனை வளர்த்து இறுதியாக சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார். தற்போது லட்சுமி பத்மாவதி தாயாராக அலர்மேல் மங்கை என அழைக்கப்படும் திருச்சானூரில் பத்மாவதி தாயாராகவும், சீனிவாசன் ஏழுமலை மீது அமர்ந்து பெருமாளாக, பாலாஜி, ஏழுமலையான் என பக்தர்கள் பல பெயர்களை வைத்து வழிபட்டு வருகின்றனர். நீளாதேவியின் தலைமுடி தானத்தை நினைவில் கொள்ளும் விதமாக தன்னை நாடி வரும் பக்தர்கள் தலைகனம் இல்லாமல் முடி காணிக்கையாக கொடுத்தால் மனம் மகிழ்ந்து விருப்பங்களையும் நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை.

அன்று முதல் திருப்பதியில் முடி காணிக்கை தருவது முக்கியமான நேர்த்திக்கடனாக இருந்து வருகிறது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டையடித்து தங்கள் தலைமுடியை காணிக்கையாக சமர்பிக்கின்றனர். இதனால் திருமலையில் எப்போதும் மொட்டையடித்து பக்தர்கள் தங்கள் அகம்பாவத்தை சுவாமிக்கு சமர்பிக்கின்றனர். இதனால் மொட்டை என்றாலே அனைவரும் கேட்பது திருப்பதி கோயிலுக்கா என்று. திருப்பதி கோயிலில் தலைமுடி காணிக்கை செலுத்துவது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். வேண்டுதலை வேண்டியபடி அருளும் சுவாமிக்கு, பக்தர்கள் பல மாதங்கள் தலைமுடியை வளர்த்து திருப்பதி கோயிலுக்கு வந்து தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். இதற்கு வயது வித்தியாசம் இல்லாமலும் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் தலைமுடியை சமர்பித்து வருகின்றனர்.

தலைமுடி காணிக்கை செலுத்தும் இடத்திற்கு கல்யாண கட்டா என அழைக்கப்படுகிறது. 1933 ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுவதற்கு தனியார்களும், திருமலையில் பக்தர்களுக்கு மொட்டையடித்து வந்தனர்.
ஆண்டுக்கு ஒரு கோடி பக்தர்களுக்கு மேல் திருப்பதி கோயிலில் மெட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். இதற்காக பிரதான கல்யாண கட்டாவுடன் பக்தர்கள் தங்கும் அறைகள், காட்டேஜ்கள், யாத்திரிகள் சமுதாய கூடத்தில் கூடுதலாக மினி கல்யாண கட்டா என அமைத்து அங்கு பக்தர்களுக்கு இலவசமாக தேவஸ்தானம் மெட்டையடித்து தலைமுடி காணிக்கை பெறுகிறது. அவ்வாது பக்தர்கள் சாதாரண நாளில் 20 ஆயிரம் பக்தர்களும், கூட்டம் அதிகமாக உள்ள நேரத்தில் 30 முதல் 40 ஆயிரம் பக்தர்கள் வரை மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர்.

இதற்காக தேவஸ்தானம் 24 மணி நேரமும் 3 சிப்டுகளாக பிரதான கல்யாண கட்டா, யாத்திரிகள் சமுதாய கூடம் ஆகியவற்றில் பக்தர்களுக்கு இலவசமாக மொட்டையடித்து தலைமுடி சேகரிக்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் தங்கும் அறைகள், காட்டேஜ்களில் பக்தர்களுக்கு மொட்டையடித்து தலைமுடி சேகரித்து வருகிறது. கருப்பு தங்கமாக தேவஸ்தானத்தில் கூறப்படும் தலைமுடிக்கு சர்வதேச சந்தையில் அதிக மவுசு உள்ளது. இந்த முடிகள் பேஷன் டிசைனிங், காஸ்மெட்டிக்ஸ் இதர ரசாயனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி கோயிலில் தினமும் 1 டன் தலைமுடி என ஆண்டுக்கு 360 டன் தலைமுடி பக்தர்கள் மூலம் தேவஸ்தானத்திற்கு கிடைக்கிறது. இந்த தலைமுடிகளை பேஷன் டிசைனிங் செய்வதற்காக இத்தாலி, பிரன்ஸ் மற்றும் நைஜீரியா நாடுகள் தலைமுடி ஏலம் எடுப்பதில் முதல் இடத்தில் உள்ளனர்.

இந்த தலைமுடி விற்பனை மூலம் கடந்த 2023 – 2024 ஆம் நிதி ஆண்டில் ரூ.226.50 கோடி வருவாய் கிடைத்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் ரூ.151.50 கோடி வருவாய் கிடைக்கும் என திட்டமிட்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. சாராசரியாக ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும். இப்படி ஆண்டுக்கு ேகாடிகளில் வருமானம் கொடுக்கும் கருப்பு தங்கம் என தலைமுடிைய அழைக்கின்றனர். திருப்பதியில் உள்ள ஏழுமலைகளான அஞ்சனாத்ரி, கருடாத்ரி, வெங்கடாத்ரி, நாராயணாத்ரி, ரிஷபாத்ரி, நீளாத்ரி, சேஷாத்ரி போன்றவற்றில் நீளாதேவியின் நினைவாக அவரது பெயர் மலைக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொட்டையடிக்கும் பணியில் பெண்கள் பக்தர்களுக்கு மொட்டையடிக்கும் பணியல் ஆண் சவரத் தொழிலாளர்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில், பெண் பக்தர்கள் சங்கடம் அடைந்து வந்த நிலையில் இதனை அறிந்த தேவஸ்தான நிர்வாகத்தினர் பெண் பக்தர்களுக்காக பெண் சவரத் தொழிலாளர்களை தேவஸ்தானம் நியமனம் செய்தது. தற்போது ஒவ்வொரு சவரத்தொழிலாளர்களும் 1 மணி நேரத்திற்கு 40 முதல் 50 பக்தர்களுக்கு மொட்டையடித்து வருகின்றனர்.

The post முதலில் தலைமுடி காணிக்கை செய்த நீளாதேவி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடிகளை குவிக்கும் கருப்பு தங்கம் appeared first on Dinakaran.

Tags : Neeladevi ,Tirupathi Eumamalaiaan Temple ,Tirupathi Devasthana ,Tirupati ,France ,Italy ,Niladevi ,Tirupathi Elomalayan Temple ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு...