×

கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் 2ம் கட்டப் பயணம் நாளை பழனியில் இருந்து தொடக்கம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் நாளை (17.12.2024) பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து தொடங்குகிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மூத்த குடிமக்கள் பங்கேற்கும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கும், இராமேசுவரத்திலிருந்து காசிக்கும், அறுபடை வீடுகளுக்கும் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இப்பயணத்தில் 1,008 மூத்த குடிமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இத்திட்டத்திற்காக அரசு ரூ.1.58 கோடி நிதி வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்தாண்டிற்கான அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்டப் பயணம் 200 மூத்த குடிமக்களுடன் கடந்த 26.11.2024 அன்று கந்தகோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட பயணமானது திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் நாளை (17.12.2024) பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து தொடங்குகிறது.

இக்குழுவினர் பழநியில் புறப்பட்டு திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி ஆகிய திருக்கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், தேங்காய் எண்ணெய், போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.

The post கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் 2ம் கட்டப் பயணம் நாளை பழனியில் இருந்து தொடக்கம் : அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Arupadai Veedu ,journey ,Palani ,Minister ,Sekarbabu ,Chennai ,Hindu Religious and Endowments Department ,Venerable Thandayuthapani Swamy Temple ,Hindu ,Religious and Endowments ,P.K. Sekarbabu… ,
× RELATED அறுபடை வீடு ஆன்மிக பயணத்தின் 2ம் கட்ட...