×

மூணாறில் செயல்பட்டு வரும் தற்காலிக பஸ் ஸ்டாண்டிற்கு அடிப்படை வசதிகள் தேவை: சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை


மூணாறு: தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும் மூணாறு.கேரளம் உட்பட வெளிமாநிலங்களுக்கு மூணாறிலிருந்து பேருந்து இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பேரூந்து நிலையத்தில் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். 30 வருடங்களுக்கு முன்பு பழைய மூணாறில் உள்ள மூலக்கடை பகுதியில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் தற்போது லாரிகள் நிறுத்தும் இடமாக செயல்படுகிறது.அதற்கு பின் பழைய மூணாறில் தனியார் கம்பெனியின் விளையாட்டு மைதானம் எதிரே மற்றும் நகரில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டது. ஆனால் பல காரணங்களால் தனியார் பேருந்து நிலையம் மூணாறு நகரில் உள்ள தபால் நிலையம் சந்திப்புக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.

எனினும் போதிய அடிப்படை வசதிகள் இங்கு செய்து கொடுக்கப்படவில்லை. நாள் இதுவரை இங்கு காத்திருப்பு மையம் இல்லாததால் பயணிகள் வெயிலிலும் மழையிலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் பேருந்து நிலையத்தோடு சேர்ந்து ஆட்டோ மற்றும் ஜீப் ஸ்டாண்ட்டும் உள்ளது. இதனால் மூணாறுக்கு வரும் வெளியூர் பயணிகள் பேருந்து நிலையத்தை கண்டு பிடிப்பதே பெரும் சவாலாக உள்ளது. மேலும் பிற மாநிலங்களில் இருந்து மூணாறுக்கு சர்வீஸ் நடத்தும் பேருந்துகளுக்கு சரியான நிறுத்தும் இடம் இல்லாததால் அவர்கள் சாலை ஓரங்களில் நிறுத்துகின்றனர். இதனால் பேரூந்து ஓட்டுநர் மற்றும் கண்டக்டர் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். ஊராட்சியின் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆலோசனை குழு இங்கிருந்து பஸ் ஸ்டாண்ட்டை ஏற்கனவே செயல்பட்ட பகுதிக்கு மாற்றுவதற்கு முடிவு செய்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் தொடர் நடவடிக்கை எடுக்கவில்லை.

மூணாறில் அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று பல வருடங்களாக அதிகாரிகள் அறிவித்து வரும்போதும் நாள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகம் உள்பட பல பகுதிகளில் இருந்து தினமும் 50 க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்ற போதும் வெயில், மழை ஆகியவற்றில் இருந்து ஒதுங்குவதற்கு கூட கட்டமைப்பு வசதி எதுவும் இல்லை. மேலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே பேருந்து நிலையத்தை பழைய மூணாறில் உள்ள பழைய இடத்திற்கே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

The post மூணாறில் செயல்பட்டு வரும் தற்காலிக பஸ் ஸ்டாண்டிற்கு அடிப்படை வசதிகள் தேவை: சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Munar ,Sunaru ,South India ,Kerala ,Harakkadai ,Old Munar ,
× RELATED மூணாறு குப்பை சேமிப்பு கிடங்கில்...