×

புழல் ஏரி நீர் இருப்பு மீண்டும் 3 டிஎம்சியாக உயர்வு


புழல்: புழல் ஏரியில் கடந்த 7 மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து அதிகரிப்பிானல், மீண்டும் நீர் இருப்பு 3 டிஎம்சியாக உயர்ந்தது. இதனால் அப்பகுதி கடல் போல காட்சியளிக்கிறது. சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போதைய வடகிழக்கு பருவமழை காரணமாக, புழல் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி, கடந்த 13ம் தேதி முதல் 18ம் தேதிவரை உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. பின்னர் மழை ஓய்ந்ததும் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று பூண்டி நீர்த்தேக்கத்தில் ஆந்திரா உள்பட பல்வேறு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பினால், அங்கிருந்து புழல், சோழவரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உபரிநீர் அதிகளவில் திறந்துவிடப்பட்டது.

இதன் காரணமாக, புழல் ஏரியில் கடந்த 7 மாதங்களுக்கு பிறகு, அதன் நீர் இருப்பு மீண்டும் 3 டிஎம்சியாக உயர்ந்துள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், தற்போது 3030 மில்லியன் கன அடியாக நீர்இருப்பு உள்ளது. இதன்மூலம் 21.2 அடி உயரமுள்ள புழல் ஏரியில், தற்போது 20.09 அடி உயரத்துக்கு நீர்இருப்பு உள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 740 கனஅடியாக உள்ளது. இங்கிருந்து சென்னை மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு விநாடிக்கு 184 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் புழல் ஏரி 91.82 சதவீத கொள்ளளவுடன் 3 டிஎம்ச நீர் நிரம்பி, கடல் போல் காட்சியளித்து வருகிறது.

இதேபோல் 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், தற்போது 186 மில்லியன் கனஅடியாக நீர்இருப்பு உள்ளது. இங்கு நீர்வரத்து இல்லை. சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்டு வந்த உபரிநீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. 18.86 அடி உயரமுள்ள சோழவரம் ஏரியில், தற்போது 4.70 அடி உயரத்துக்கு நீர்இருப்பு உள்ளது. புழல், சோழவரம் ஏரிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post புழல் ஏரி நீர் இருப்பு மீண்டும் 3 டிஎம்சியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Puzhal Lake ,Puzhal ,Chennai ,Dinakaran ,
× RELATED புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்: அதிகாரிகள் தகவல்