×

மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் மழை இல்லாததால் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல அனுமதி

விகேபுரம்,டிச.16: மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் மழை இல்லாததால் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வராததால் அகஸ்தியர் அருவியில் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் தினமும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து மகிழ்கின்றனர். அதே போன்று மலைமீதுள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் தினமும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்வார்கள். இந்நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்தது. இதனால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. அதே நேரத்தில் மலைப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் பாதுகாப்பு கருதி அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதே போன்று ெசாரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் 1 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வராததால் பாதுகாப்பு கருதி 3வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேநேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பாபநாசம் வனச்சரகத்தில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல நேற்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அகஸ்தியர் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு நீர்வரத்து இன்று குறையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்றனர்.

The post மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் மழை இல்லாததால் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல அனுமதி appeared first on Dinakaran.

Tags : Karaiyar Sorimuthu Ayyanar temple ,Western Ghats ,Vikepuram ,Agasthiyar ,Papanasam ,Nellai district… ,
× RELATED வத்திராயிருப்பு அருகே தோப்புகளை...