தர்மபுரி, டிச.16: உலக வங்கி நிதியுதவித் திட்டத்தின் கீழ், தர்மபுரி அருகே உள்ள குமாரசெட்டி ஏரி ₹4 கோடியில் புனரமைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பெய்த கனமழையால் முழுமையாக நிரம்பியது. இந்த ஏரியில் கூடுதலாக 4 அடி வரை தண்ணீர் சேமிக்க முடியும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்ட எல்லையில், 72 ஏக்கர் பரப்பளவில் குமாரசெட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி அடர்ந்த காடு மற்றும் மலை குன்றுகள் உள்ளன. மலையின் நடுவே இந்த ஏரி அமைந்துள்ளதால், ஆண்டு முழுவதும் ஏரியில் தண்ணீர் இருக்கிறது. இந்த ஏரிக்கு நீர்ப்பிடிப்பு பகுதியாக தளி, பெட்டமுகிலாம் வனப்பகுதிகள் உள்ளன. பருவமழை காலத்தில், இந்த ஏரிக்கு தண்ணீர் வந்து நிரம்புகிறது. ஏரியின் உபரிநீர் சின்னாற்றில் கலந்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலக்கிறது. கடந்த 2005ம் ஆண்டு பெய்த மழையின் போது, ஏரி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. ஏரியின் கரையும் சேதமடைந்தது. இந்த ஏரியை நம்பி 595 ஏக்கரில் நெல், கரும்பு, மஞ்சள், தக்காளி மற்றும் காய்கறி வகைகள், நெல் பயிர், மலர் செடிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
உலக வங்கி நிதி உதவியின் கீழ், குமாரசெட்டி ஏரியில் ₹4 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்ப்டடது. சின்னாற்றின் குறுக்கே, 15 இடங்களில் ₹15.69 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பணிகள் அனைத்து கடந்த மாதம் நிறைவு பெற்றது. இதனால், எதிர்வரும் மழை காலங்களில், சின்னாற்றில் கணிசமாக தண்ணீர் தேக்கி வைக்க முடியும். காவிரியில் வீணாக தண்ணீர் கலப்பதை தவிர்க்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில், தர்மபுரி கலெக்டர் சாந்தி, சில மாதங்களுக்கு முன்பு குமாரசெட்டி ஏரியில் நடந்த புனரைமைப்பு பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து, குமாரசெட்டி ஏரியை, மேலும் 4 அடி ஆழப்படுத்தப்பட்டு தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த 30ம் தேதி முதல் 4ம் தேதி வரை, கொட்டித் தீர்த்த கனமழையால் குமாரசெட்டி ஏரி முழுமையாக நிரம்பியது.
அங்கிருந்து வெளியேறிய உபரிநீர், அருகே உள்ள கோனேரி ஏரியை சென்றடைந்தது. இதையடுத்து, அந்த ஏரியும் நேற்று நிரம்பியது. இரண்டு ஏரிகளும் நிரம்பியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘உலக வங்கி நிதியுதவித் திட்டத்தின் கீழ், சின்னாறு உப வடிநிலத்தில், நீர்வள நிலவளத்துறையின் மூலம் குமாரசெட்டி ஏரி புனரமைக்கப்பட்டதன் காரணமாக, தற்போது மழையால் கிடைத்த தண்ணீரை முழுவதுமாக சேமிக்க முடிந்துள்ளது. இதன்மூலம் 10713 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்,’ என்றனர்.
The post தொடர் மழையால் நிரம்பிய குமாரசெட்டி ஏரி appeared first on Dinakaran.