×

3 நாளாக தொடர்ந்து கொட்டிய மழை ஓய்ந்தது; தூத்துக்குடியில் வெள்ளநீரை அகற்றும் பணி தீவிரம்: கனிமொழி எம்பியிடம் சேதம் குறித்து விசாரித்தார் முதல்வர்

தூத்துக்குடி: தூத்துக்குடியை 3 நாட்களாக மிரட்டி ெகாட்டி வந்த மழை நேற்று ஓய்ந்த நிலையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கிய வெள்ளநீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. இதனை பார்வையிட்ட கனிமொழி எம்பியிடம் சேதம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தூத்துக்குடியில் 3 நாட்களாக தொடர்ந்து மிரட்டி வந்த மழை நேற்று முன்தினம் இரவு முதல் குறையத் துவங்கியது. நேற்று முற்றிலும் மழை ஓய்ந்தது. இதனால் தூத்துக்குடி பழைய மாநகராட்சி பகுதி, ரயில்வே ஸ்டேஷன், எஸ்எஸ் தெரு, தபால் தந்தி காலனி, பாளையங்கோட்டை சாலை, ராஜிவ் நகர், கதிர்வேல் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சூழ்ந்த மழை நீர் படிப்படியாக வடிந்து வருகிறது. அமைச்சர் கீதாஜீவன் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு மழை நீரை வெளியேற்றும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார். பாளை ரோடு, பைபாஸ் சாலை, மாவட்ட தொழில் மையம் அருகே பக்கிள் ஓடையின் வழியாக தடையின்றி வெள்ளநீர் வெளியேறுகிறதா? என்று ஆய்வு செய்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையை பார்வையிட்ட அமைச்சர் கீதாஜீவன், அங்கு செய்யப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டீன் சிவகுமாரிடம் விசாரித்தார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பணியை துரிதப்படுத்தினார். கேம்ப்-1ல் செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உணவு ஏற்பாடு செய்தார்.

மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு இடங்களில் மழை நீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உப்பாற்று ஓடை, துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலம் ஆகிய பகுதிகளில் இருந்து மழைநீர், நகருக்குள் வராமல் இருப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். கலெக்டர் இளம்பகவத் மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், அப்பன்கோவில், புன்னக்காயல் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார். இந்நிலையில், தூத்துக்குடி அருகே சூசைபாண்டியாபுரம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட தொழில் மையம், இந்திய உணவுக் கழக குடோன், தபால் தந்தி காலனி, ராஜீவ் நகர் மற்றும் திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை கனிமொழி எம்பி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆத்தூர், ஏரல், ஸ்ரீவைகுண்டம் பாலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் செல்வதை பார்வையிட்டு ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். மேலும், நிவாரண முகாம்களுக்கு சென்று, அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார். கனிமொழி எம்பி தூத்துக்குடி எப்சிஐ குடோனில் ஆய்வு செய்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் பேசினார். அப்போது தூத்துக்குடியில் மழை நிலவரத்தை கேட்டறிந்த முதல்வர், வெள்ள சேதங்கள் தொடர்பாகவும் எம்பியிடம் விவரங்களை கேட்டார். அப்போது தூத்துக்குடி பகுதியில் தற்போது மழை இல்லை. வெயில் அடிக்கிறது. பல இடங்களில் பார்வையிட்டுள்ளேன். பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. மழை நீரை வெளியேற்றும் பணிகள் முழு அளவில் நடைபெற்று வருகிறது என கனிமொழி எம்பி முதல்வர் முக.ஸ்டாலினிடம் தெரிவித்தார்.

The post 3 நாளாக தொடர்ந்து கொட்டிய மழை ஓய்ந்தது; தூத்துக்குடியில் வெள்ளநீரை அகற்றும் பணி தீவிரம்: கனிமொழி எம்பியிடம் சேதம் குறித்து விசாரித்தார் முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Tuthukudi ,Kanimozhi ,MB ,Thoothukudi ,Kanimozhi MB ,Chief Minister ,K. Stalin ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த சம்பவம்...