*கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பெரியகுளம் : தேனி மாவட்டம், பெரியகுளம் சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவான 126.28 எட்டியது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் நேற்று முன் தினம் காலை நிலவரப்படி 124.11 அடியாக இருந்தது. இந்த நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து 88 கன அடியில் இருந்து 670 கன அடியாக உயர்ந்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாள் இரவில் இரண்டடி உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டிய நிலையில், அணைக்கு வரும் 560 கன அடி உபரி நீர் அப்படியே வெளியேறி வருகிறது. சோத்துப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வருவதால் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், நடுப்பட்டி, சிந்துவம்பட்டி, குள்ளப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள வராக நதி ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவும் ஆற்றைக் கடக்கவும் வேண்டாம் என பொதுப்பணி துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மழை தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் போது மலையில் இருந்து நீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியது appeared first on Dinakaran.