சென்னை: கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், நேற்று முதலே கனமழை பெய்து வருவதை அடுத்து மாணவர்கள் பாதுகாப்பு கருதி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுச்சேரி, விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.13) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், சேலம், சிவகங்கை, மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், தேனி, கரூர், தர்மபுரி, அரியலூர், திருவாரூர், நாகை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
எனினும் சில பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் சூழலுக்கேற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.13) பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
The post கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை appeared first on Dinakaran.