திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மலையே மகேசனாக காட்சியளிக்கும் 2,668 அடி உயர அண்ணாமலை மீது ‘மகாதீபம்’ ஏற்றப்பட்டது. அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த மகாதீபத்தை சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். தென்னகத்து கயிலாயம் என போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையர் திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக அமைந்திருக்கிறது. மேலும், 6 ஆதாரத் தலங்களில் மணிப்பூரக தலமாகவும், நினைக்க முக்தித் தரும் திருத்தலமாகவும் திகழ்கிறது.
ஞான தபோதனரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலை சித்தர்களின் சரணாலயம் எனும் சிறப்பை பெற்றுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பெருமையும் மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் உற்சவம் கோலாகலமாக நடந்தது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளும் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் 6ம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளன்று மகா தேரோட்டமும் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக நேற்று மகாதீப பெருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக, அதிகாலை 2.30 மணி முதல் 3.45 மணி வரை சுவாமிக்கு பரணி அபிஷேகம் நடந்தது. மேலும், மகா மண்டபத்தில் பிரதோஷ நந்தியின் வலதுபுறம் 5 மடக்குகள் வைத்து தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர், பரிச்சாரக சிவாச்சாரியார்கள் மூலம் மகா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, ரதவிளக்குகளை கடந்து 2ம் பிரகாரம், 3ம் பிரகாரம் வழியாக வந்து அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. நிறைவாக, சொர்ணபைரவர் சன்னதியில் மடக்கு தீபம் காட்சியளித்தது. பஞ்சபூதங்களை அரசாளும் இறைவன், ஏகனாகவும் அனேகனாகவும் அருள்பாலித்து (பஞ்சமூர்த்திகளாக) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய 5 தொழில்களை செய்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான மகா தீபப்பெருவிழா நேற்று மாலை நடந்தது.
அதையொட்டி, மதியம் 2 மணியளவில் அனுமதி அட்டை வைத்திருந்தவர்கள் மட்டும் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திருக்கோயிலில் மாலை 4.30 மணி முதல் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கார ரூபத்தில் கோயில் 3ம் பிரகாரம் தீபதரிசன மண்டபத்தில் அடுத்தடுத்து எழுந்தருளினர். பின்னர், உமையாளுக்கு இடபாகம் வழங்கிய அண்ணாமலையார், ‘அர்த்தநாரீஸ்வரர்’ திருக்கோலத்தில் ஆனந்த தாண்டவத்துடன் மாலை 5.58 மணியளவில் கோயில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
ஆண்டுக்கு ஒருமுறை மகா தீபத்தன்று மட்டுமே சில நிமிடங்கள் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வர் அருட்காட்சியை தரிசித்த பக்தர்கள், பக்திப் பெருக்குடன் உள்ளம் உருகி விழிகளில் நீர்கசிய ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என விண்ணதிர முழக்கமிட்டனர். அப்போது, அண்ணாமலையார் திருக்கோயில் 3ம் பிரகாரம் கயிலாயம் போல காட்சியளித்தது. அனைவரது விழிகளும் மலை உச்சியை நோக்கியே காணப்பட்டது. தொடர்ந்து, மாலை 6 மணியளவில் கோயில் கொடிமரம் அருகே அகண்டதீபம் ஏற்றப்பட்டதும், 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது.
அண்ணாமலையார் துதி, பாமாலை, சங்கொலி முழங்க, பாரம்பரிய வழக்கப்படி பருவதராஜ குலத்தினர் மகாதீபம் ஏற்றினர். அப்போது, தான் எனும் அகந்தை அழித்து அருள்ஒளி பெருக்கும் அண்ணாமலையார், ஜோதிப்பிழம்பாக மலை மீது காட்சியளித்தார். தொடர்ந்து, திருக்கோயில் பிரகாரங்கள் தீபஒளியால் ஜொலித்தது. நகரெங்கும் வண்ணமயமான வானவேடிக்கைகள் அதிர்ந்தன. வீடுகளில் அகல்தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். கிரிவலப்பாதையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை தரிசித்தனர்.
மகாதீப பெருவிழாவை தரிசிக்க, திருவண்ணாமலையில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர். அதனால், திருக்கோயில், மாடவீதி, கிரிவலப்பாதை என காணும் திசையெங்கும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. கிரிவலப்பாதையின் 14 கிமீ தூரமும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டது. கிரிவலப்பாைத உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில், நூற்றுக்கணக்கான இடங்களில் பக்தர்களுக்கு சுவையான அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. குடிநீர், பால், மோர், பழச்சாறு போன்றவை வழங்கப்பட்டன.
விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தீபத்திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், 7 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உள்பட 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
*பக்தர்கள் மலையேற தடை
திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, மகாதீபத்தை தரிசிக்க மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே, தீபம் ஏற்றும் திருப்பணியில் ஈடுபடுவோர் மட்டும் பலத்த பாதுகாப்புடன் மலைேயற அனுமதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களுடன் பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மருத்துவக்குழுவினரும் மலைக்கு சென்றனர். தீபம் காட்சி தரும் 11 நாட்களும், மலையேற பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தினமும் தீபம் ஏற்றும் திருப்பணியில் ஈடுபடுவோர் மட்டும் பலத்த பாதுகாப்புடன் மலைேயற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
* முதல் முறையாக சமூக வலைதளத்தில் டிரெண்டிங்
அமைச்சர் பி.கே.சேகர் கூறுகையில், ‘தீபத்திருவிழா சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், அரோகரா சப்தம் விண்ணதிர நடந்து முடிந்திருக்கிறது. முதல் முறையாக இந்த ஆண்டுதான் தீபத்திருவிழாவுக்கான வாழ்த்துக்கள் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி இருக்கிறது. திருவிழாக்களை சிறப்போடு நடத்துவோம். பக்தர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்போம்’ என்றார்.
* தீபம் 11 நாட்கள் மலை மீது காட்சி தரும்
தீபமலை மீது நேற்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலைமீது காட்சி தரும். வரும் 23ம் தேதி வரை மகா தீபத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். தினமும் மாலை 6 மணிக்கு மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். மலை மீது முதல் நாளன்று ஏற்றப்படும் தீபம் மகாதீபம். இரண்டாம் நாளன்று ஏற்றப்படுவது சிவாலய தீபம். மூன்றாவது நாள் ஏற்றப்படுவது விஷ்ணு தீபம் என அழைக்கப்படுகிறது.
தீபத்திருவிழாவின் ஆரம்ப காலங்களில் முதல் 3 நாட்கள் மட்டுமே மலை மீது தீபம் ஏற்றப்படுவது வழக்கமாக இருந்தது. பின்னர் 5 நாட்களாக அதிகரிக்கப்பட்டு தற்போது 11 நாட்கள் மலை மீது மகாதீபம் காட்சியளிக்கிறது. அதற்காக, சுழற்சி முறையில் கோயில் திருப்பணியாளர்கள் மற்றும் பருவதராஜ குலத்தினர் மலை மீது முகாமிட்டு தீபம் ஏற்றும் திருப்பணியை மேற்கொள்கின்றனர்.
* மகா தீபத்துக்கு 4,500 கிலோ நெய்
அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், 1,500 மீட்டர் திரி (காட்டன் துணி), 25 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. மகாதீபம் ஏற்றப்படும் தீபக்கொப்பரை ஐந்தரை அடி உயரமும், 200 கிலோ எடையும் கொண்டது. மகாதீப கொப்பரையில் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் தீட்டப்பட்டுள்ளது.
The post திருவண்ணாமலையில் அரோகரா முழக்கம் விண்ணதிர 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்: 30 லட்சம் பக்தர்கள் திரண்டனர் appeared first on Dinakaran.