×

ஐதராபாத் செஞ்சல்குடா சிறையில் இருந்து நடிகர் அல்லு அர்ஜுன் ஜாமீனில் விடுதலை

ஐதராபாத்: ஐதராபாத் செஞ்சல்குடா சிறையில் இருந்து நடிகர் அல்லு அர்ஜுன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். நடிகர் அல்லுஅர்ஜூன் நடித்த `புஷ்பா 2’ பான் இந்தியா படம் கடந்த வாரம் 5ம்தேதி அதிகாலை வெளியானது. அன்றைய தினம் பல இடங்களில் உள்ள தியேட்டர்கள் முன் ரசிகர்கள் அலைமோதினர். இதேபோல் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் தில்சுக் நகரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது மனைவி ரேவதி(39), மகன் ஸ்ரீதேஜ்(9), மகள் சன்விகா(7) ஆகியோருடன் ஐதராபாத் ஆர்.டி.சி.எக்ஸ் சாலையில் உள்ள தியேட்டரில் புஷ்பா 2 சினிமா பார்க்கச்சென்றனர்.

அங்கு திடீரென இப்படத்தின் கதாநாயகனான அல்லுஅர்ஜூன் வந்ததால் அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி ரேவதி பலியானார். ஸ்ரீதேஜ் சுயநினைவு இழந்தான். இதுதொடர்பாக சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து தியேட்டர் உரிமையாளர் மற்றும் நிர்வாகத்தினர் அலட்சியத்திற்காக சந்தியா திரையரங்க உரிமையாளர்களில் ஒருவரான சந்தீப், மேலாளர் நாகராஜ் மற்றும் செக்யூரிட்டி பொறுப்பாளர் விஜயசந்தர் உள்பட 7 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் 11வது குற்றவாளியாக நடிகர் அல்லு அர்ஜூன் பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணிக்கு நடிகர் அல்லுஅர்ஜுனை ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளிஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று போலீசார் கைது செய்து சிக்கட்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். நடிகர் அல்லு அர்ஜூன் மீது பி என்எஸ் சட்டப்பிரிவு என்எஸ் 105, 118(1)ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 105 பிரிவு ஜாமீனில் வெளிவர முடியாது. 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். பிஎன்எஸ் 118(1)ன் கீழ் ஓராண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே சிக்கடப்பள்ளி போலீசார் அல்லு அர்ஜூனுக்கு மருத்துவ பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நாம்பள்ளி நீதிமன்றத்திற்கு போலீசார் அல்லு அர்ஜூனை அழைத்து சென்று மாஜிஸ்ரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது நடிகர் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நாம்பள்ளி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். தொடர்ந்து போலீசார் அல்லு அர்ஜூனை சென்சுலகூடா சிறைக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையில் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் கேட்டும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் அல்லு அர்ஜூன் தரப்பில் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அல்லு அர்ஜூனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் ஒருநாள் இரவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன், பின்புற வழியாக காரில் சென்றார். அப்போது அவரது ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

The post ஐதராபாத் செஞ்சல்குடா சிறையில் இருந்து நடிகர் அல்லு அர்ஜுன் ஜாமீனில் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Allu Arjun ,Hyderabad Senjalguda prison ,Hyderabad ,Alluarjun ,Dinakaran ,
× RELATED தெலங்கானாவில் கைது செய்யப்பட்ட...