×

அருணாசலேஸ்வரர் திருக்கோயில் 360 டிகிரி

திருக்கோயில்களில் சுவாமி புறப்பாடு ராஜகோபுரம் வழியாக நடைபெறுவதே வழக்கம். ஆனால், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உற்சவ மூர்த்திகள் புறப்பாடு ராஜகோபுரத்தின் வழியாக நடப்பதில்லை. ராஜகோபுரத்தின் அருகே அமைந்துள்ள திட்டிவாசல் வழியாகவே உற்சவ மூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது.மார்கழி மாதத்தில் திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் விழாவில் மட்டும் திருமஞ்சன கோபுரம் வழியாக நடராஜர் புறப்பாடு நடைபெறும். திருக்கோயில் நடைதிறப்புக்கான திருமஞ்சனம் தினசரி அதிகாலை இந்த வாசல் வழியாகக் கொண்டுவருவதால் தெற்கு கோபுரத்துக்கு திருமஞ்சன கோபுரம் எனும் பெயர் வந்தது.
திருவண்ணாமலை திருக்கோயில் நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலம். திருமூலர் பாடிய திருமந்திரத்தில், திருவண்ணாமலை வரலாறு தொடர்பான ஒன்பது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அண்ணாமலையார் திருக்கோயில் இளையனார் (முருகர்) மீது பக்தி கொண்ட அருணகிரிநாதர், 79 திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். மார்கழி மாதத்தில் பாடப்படும் திருவெம்பாவை பாடல்களை திருவண்ணாமலையில் அருளினார் மாணிக்கவாசக பெருமான்.

அவருக்கு, கிரிவலப்பாதையில் அடி அண்ணாமலையில் தனியாக கோயில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை திருக்கோயிலில் எழுந்தருளும் அண்ணாமலையார் உற்சவ மூர்த்திகள் பெரிய சந்திரசேகரர், சின்ன சந்திரசேகரர், பக்தானுக்ரஹ சோமாஸ்கந்தர், பெரிய நாயகர், சின்னநாயகர் என்று அழைக்கப்படுகின்றனர். நின்ற திருமேனி கோலத்தில் காட்சியருள்பவர், சந்திரசேகரர். உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் சோமஸ்கந்தருடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் அர்த்தஜாம பூஜையின்போது, அம்மனுக்கு அபிஷேகம் செய்வதில்லை. இரவில் அம்மன் கூந்தல் உலராது என்பதுதான் அதற்கான காரணம்.அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு7 பிராகாரங்கள் என்பது வியப்பானது. ஆம்..! திருக்கோயிலின் உட்பிராகாரத்தில் முதலாம் பிராகாரம் முதல் ஐந்தாம் பிராகாரம் வரை அமைந்துள்ளது. திருக்கோயில் மாட வீதி ஆறாம் பிராகாரம் எனவும், கிரிவலப்பாதை ஏழாம் பிராகாரம் எனவும் அழைக்கப்படுகிறது.

திருக்கோயில் 5ம் பிராகாரத்தில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ளது பாதாள லிங்க சந்நதி. இங்குதான், பகவான் ரமணர் தவமிருந்தார். அண்ணாமலையார் திருக்கோயில் யானை ருக்குவை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கடந்த 2001ம் ஆண்டு 7 வயது குட்டியாக இக்கோயிலுக்கு வந்தது பெண் யானை ருக்கு. தினமும் அதிகாலை கோயில் நடை திறப்புக்கான திருமஞ்சனம் கொண்டுவரும் திருப்பணியை ருக்கு நிறைவேற்றி வந்தது. பக்தர்களின் செல்லமாகவும் திகழ்ந்தது. கடந்த 22.3.2018 அன்று இரவு யானை ருக்கு பரிதாபமாக இறந்தது. அதைத்தொடர்ந்து, திருக்கோயில் மதிலையொட்டி வடஒத்தைவாடை வீதியில் யானை ருக்கு அடக்கம் செய்யப்பட்டு, அந்த இடத்தில் நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது.

ஓயா மடம், சாதுக்கள் மடம், கருணீகர் மடம், யாதவர் மடம், வன்னியர் மடம், திருக்குறிப்பு தொண்டர் மடம், துளுவவேளாளர் மடம், பர்வதகுல மடம், விசுவகர்மா மடம், அப்பர் மடம், வாணியர் மடம், குயவர் மடம் என எண்ணற்ற சமுதாய மடங்களும், மண்டபங்களும் திருவண்ணாமலையில் நிறைந்திருக்கின்றன. அதனால், ‘சத்திரங்கள் நிறைந்த சரித்திர நகரம்’ என திருவண்ணாமலை அழைக்கப்படுகிறது.சிவன் கோயில்களில் வைகுந்த வாசல் அமைந்துள்ள தனிப்பெரும் சிறப்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு உண்டு. வைணவ கோயில்களில் மட்டுமே நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு ஆண்டுதோறும் அண்ணாமலையார் கோயிலிலும் நடைபெறுகிறது.
மலை சுற்றும் பாதையில், விநாயகருக்கு மட்டும் தனியாக 16 சந்நதிகள் உள்ளன. அதில், செங்கம் சாலை சந்திப்பு அருகே அமைந்துள்ள தலை திருக தனம் கொடுத்த விநாயகர் சந்நதி விசேஷமானது. முருகருக்கு 7 தனிக் கோயில்கள் அமைந்துள்ளன.

குன்றக்குடி ஆதீனம் உருவானது திருவண்ணாமலையில். ஆதீனத்தை தோற்றுவித்தவர் தெய்வசிகாமணி தேசிகர். இவர், அண்ணாமலையார் கோயிலில் சிவத்தொண்டாற்றியவர். அப்போது அரசாட்சி செய்த மன்னரின் பட்டத்துக் குதிரை பாம்பு கடித்து இறந்தது. அந்த குதிரையை தெய்வசிகாமணி தேசிகர் உயர்ப்பித்தார் என்பதை விவரிக்கும் சிற்பக் காட்சி அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ளது. கால மாற்றங்களால், ஆதீனம் குன்றக்குடிக்கு இடம்பெயர்ந்தது. திருவண்ணாமலை குன்றக்குடி நகரில் ஆண்டுதோறும் தெய்வசிகாமணி தேசிகருக்கு குருபூஜை விழா நடைபெறுகிறது.அண்ணாமலையார் திருக்கோயில் 2ம் பிராகாரத்தில் சமயக் குரவர்களான திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் உற்சவ மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். மேலும், இந்தப் பிராகாரத்தில், 1008 முகங்களைக் கொண்ட சகஸ்ர லிங்கமும், 108 முகங்களைக் கொண்ட அஷ்டோத்திர லிங்கமும் அருள்தருகின்றன.

விழாக் கோலம்

திருவண்ணாமலை திருக்கோயில், ஆண்டின் அனைத்து நாட்களிலும் ஏதேனும் ஒரு விழாகாணும் சிறப்பு பெற்றுள்ளது. அவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களின் விவரம்:

சித்திரை: சித்திரை வசந்த உற்சவம் (10 நாட்கள்)
வைகாசி: வைகாசி விசாகம் (1 நாள்)
ஆனி: ஆனி பிரமோற்சவம் (10 நாட்கள்), ஆனித் திருமஞ்சனம் (1 நாள்)
ஆடி: ஆடிப்பூர பிரமோற்சவம் (10 நாட்கள்), சுந்தரர் உற்சவம் (1 நாள்)
ஆவணி: ஆவணி மூலம் உற்சவம் (1 நாள்),
புரட்டாசி: நவராத்திரி பெருவிழா (9 நாட்கள்),
ஐப்பசி: அன்னாபிஷேகம் (1 நாள்), கந்த சஷ்டி விரதம் (6 நாட்கள்)
கார்த்திகை: கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் (17 நாட்கள்)
மார்கழி: ஆருத்ரா தரிசனம்
தை: உத்தராயண புண்ணியகால உற்சவம் (10 நாட்கள்), மணலூர்பேட்டை தென்பெண்ணையில் தீர்த்தவாரி, கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி தீர்த்தவாரி.
மாசி: மகா சிவராத்திரி. மாசி மகம் உற்சவம், கௌதம நதியில் தீர்த்தவாரி.
பங்குனி: பங்குனி உ்த்திர திருக்கல்யாண உற்சவம் (6 நாட்கள்)

தினசரி ஆறு கால பூஜைகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் ேகாயிலில், தினமும் 6 கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. திருக்கோயில் நடை திறப்பு தினமும் அதிகாலை 5 மணிக்கு நடைபெறும். பௌர்ணமி போன்ற விசேஷ தினங்களில் மட்டும், பக்தர்களின் தரிசனத்துக்காக அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு நடைபெறும். மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும்.இத்திருக்கோயிலில் தினசரி ஆறு கால பூஜைகள் நடைபெறுகிறது. கோ பூஜை, பள்ளி எழுச்சி பூஜை, பள்ளியறை பூஜை ஆகியவை கால பூஜைகளில் இடம் பெறாதவை.

தினசரி பூஜைகள் விவரம்

அதிகாலை 5.00 மணி: கோ பூஜை
அதிகாலை 5.15 மணி: பள்ளி எழுச்சி பூஜை
அதிகாலை 5.30 மணி: உஷக்கால பூஜை
காலை 8.00 மணி: கால சந்தி பூஜை
பகல் 11.30 மணி: உச்சிக்கால பூஜை
மாலை 5.30 மணி: சாயரட்சை பூஜை
இரவு 7.30 மணி: இரண்டாம் கால பூஜை
இரவு 9.00 மணி: அர்த்தஜாம பூஜை
இரவு 9.30 மணி: பள்ளியறை பூஜை

பாத தரிசனம்

அடி முடி காணாத பரம்பொருளான அண்ணாமலையாரின் திருப்பாத தரிசனத்தை திருவண்ணாமலையில் இரண்டு இடங்களில் நாம் தரிசிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள், சுவாமி சந்நதியையும், அம்மன் சந்நதியையும் தரிசித்து முடித்ததும் ‘எல்லாம் நிறைவடைந்தது’ என கருதுகின்றனர். ஆனால், அது முழுமையான தரிசன நிறைவு இல்லை.இறைவனை தரிசித்தபின் வேறென்ன தரிசிக்க வேண்டியிருக்கிறது என்று நினைக்கத் தோன்றும். ஆம்..! திருக்கோயிலின் ேமற்கு கோபுரத்துக்கு (பே ேகாபுரம்) செல்லும் வழியில் 5ம் பிராகாரத்தின் தென்திசையில் அருள்தருகிறது பரம்பொருளின் திருப்பாதம்.பாத தரிசனம் வேண்டி, அடியார்களும், சித்தர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக, அண்ணா மலையார் சந்நதியில் விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்திருப்பதே திருப்பாதம் என்கின்றனர்.நினைக்க முக்திதரும் திருவருணை திருக்கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள், தங்கள் வழிபாட்டின் நிறைவாக இறைவனின் திருப்பாதத்தை வணங்குவது பெரும் பயனைத் தரும்். கோயிலில் ‘அண்ணாமலையார் பாதம்’ தனி சந்நதியாகவே அமைந்திருப்பது சிறப்பு.

திருப்பாத சந்நதியில், தினமும் மலர் அலங்காரத்துடன், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பாதத்தைச் சுற்றியுள்ள தூண்களில், விநாயகர், முருகர், கோதண்டராமர், சத்திதேவி ஆகியோரது திருவுருவங்கள் எழுந்தருளியுள்ளன.நிசப்தம் தவழும் சூழலில் அமைந்துள்ள திருப்பாத சந்நதியில், கண்மூடி சில நொடி தியானித்தாலே போதும். எல்லா இடையூறும் அகலும், உள்ளத்தில் இருள் நீங்கி வெளிச்சம் பரவும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.அண்ணாமலையார் திருக்கோயிலில் காட்சிதருவதைப் போலவே, மகா தீபம் ஏற்றப்படும் தீபமலையின் உச்சியிலும் இறைவனின் பாதம் அமைந்திருக்கிறது. தீப தரிசனம் காண மலைேயறும் பக்தர்கள், அங்குள்ள பாதத்தை தரிசனம் செய்யலாம்.

The post அருணாசலேஸ்வரர் திருக்கோயில் 360 டிகிரி appeared first on Dinakaran.

Tags : Arunasaleshwarar Temple ,Swami ,Rajakopura ,Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Shydivasal ,Thiruvathirai ,Markazhi ,Arunasaleshwar ,
× RELATED வரலாற்று நோக்கில் அண்ணாமலை ராஜகோபுரம்