×

புகார் அளித்தும் அலட்சியம் கொலையை தடுக்க தவறிய பெண் இன்ஸ். சஸ்பெண்ட்: டிஐஜி அதிரடி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் திரவுபதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவா மணிகண்டன் (28). மினிபஸ் டிரைவரான இவரிடம், கடந்த 6ம்தேதி பஸ்சிற்கு டீசல் நிரப்ப பங்க் அருகில் சென்றபோது கஞ்சா போதையில் இருந்த சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் சிவா மணிகண்டன் புகார் செய்துள்ளார்.

இந்நிலையில் 7ம்தேதி இரவு அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த சிவா மணிகண்டனை, முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. தகராறு தொடர்பாக போலீசில் புகார் அளித்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாகவும், புகார் கொடுத்தபோதே அவர்களை கைது செய்திருந்தால் கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம் எனவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான அய்யம்பேட்டை சுந்தரேசன், பரமேஸ்வரன், ராகுல் ஆகியோர் நேற்றுமுன்தினம் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சிவா மணிகண்டன் முதல் நாள் இரவு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த காரணத்தால் தான் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும், குற்ற சம்பவத்தை தடுக்க தவறியதற்காகவும் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிமதியை சஸ்பெண்ட் செய்து தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

The post புகார் அளித்தும் அலட்சியம் கொலையை தடுக்க தவறிய பெண் இன்ஸ். சஸ்பெண்ட்: டிஐஜி அதிரடி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Siva Manikandan ,Thirupadiyamman Temple Street ,Pasupathigo ,Ayyampet, Thanjavur district ,
× RELATED தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்பனை