×

ஸ்கூட்டி – டிராக்டர் மோதல் பள்ளி ஆசிரியை, மாணவி பலி: முதல்வர் நிவாரண நிதி அறிவிப்பு

வெள்ளகோவில்: ஸ்கூட்டி, டிராக்டர் மோதியதில் அரசு பள்ளி ஆசிரியை, மாணவி பலியாகினர். இவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே அகரப்பாளையம் புதூர் நகராட்சி ஆரம்ப பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் சரஸ்வதி (45). இவர், நேற்று காலை தனியார் வேன் ஓட்டுநர் கார்த்திக் மகள் ராகவி (10), அவரது தங்கை யாழினி (8) ஆகியோரை தனது ஸ்கூட்டியில் பள்ளிக்கு அழைத்து சென்றார். செம்மாண்டபாளையம் மளிகை கடை அருகே ஸ்கூட்டி நிலை தடுமாறியதில், டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சம்பவ இடத்திலேயே ஆசிரியை சரஸ்வதி (45), 5ம் வகுப்பு மாணவி ராகவி (10) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த யாழினி காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பலியான ஆசிரியை சரஸ்வதி மற்றும் மாணவி ராகவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்த மாணவி யாழினிக்கு ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

The post ஸ்கூட்டி – டிராக்டர் மோதல் பள்ளி ஆசிரியை, மாணவி பலி: முதல்வர் நிவாரண நிதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vellakoil ,Chief Minister ,M. K. Stalin ,Agarapalayam Pudur Municipal Primary School ,Vellakovil, Tirupur District… ,
× RELATED வெள்ளக்கோவில் பகுதியில் சாலை...