×

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பேட்டி

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பேட்டி அளித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசுகையில்; வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை – தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த நான்கு நாட்கள் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழையைப் பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கும். நாளை டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் இருக்கிறது. 12ம் தேதி திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். திருவள்ளூர் தொடங்கி நாகப்பட்டினம் வரையிலான வடகடலோர மாவட்டங்களிலும் வேலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. 13ம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். சில நேரங்களில் 55 கிலோமீட்டர் வேகத்தில் 13ம் தேதி வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 45 சென்டிமீட்டர். இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 40 சென்டிமீட்டர். இது இயல்பை விட 14 சதவீதம் அதிகம்” என்றார்.

The post தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : southeast Bank Sea ,Meteorological Survey Center ,South Zone ,Chennai ,South ,Zone ,Meteorological Centre ,South East Bank Sea ,District President Balachandran ,Meteorological Survey Centre ,Chennai Nungambakam ,Dinakaran ,
× RELATED வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த...