- Krishnanagar
- ரெயின்போ நகர்
- ஆசிய அபிவிருத்தி வங்கி
- புதுச்சேரி
- Krishnanagar
- செல்லன் நகர்
- வெங்கடநகர்
- தின மலர்
*ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து நிதி பெற அரசு நடவடிக்கை
புதுச்சேரி : புதுச்சேரியில் கனமழையின்போது, கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், செல்லான் நகர் மற்றும் வெங்கட்டா நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான திட்ட அறிக்கையை அரசு தயார் செய்துள்ளது. புதுச்சேரியில் ஒவ்வொரு கனமழையின்போதும் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், செல்லான் நகர், வெங்கட்டா நகர் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொருமுறையும், அடுத்தாண்டுக்குள் இந்த பிரச்னை முழுவதுமாக களையப்படும் என அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதி வெள்ளத்தில் அடித்து செல்வதை போன்றே உள்ளது.
இந்நிலையில் கடந்த 30ம் தேதி பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் 48.4 செமீ மழை பதிவானது. இதில் வரலாறு காணாத வகையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் படகு மூலம் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். குறிப்பாக கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் பகுதிகளில் குடியிருப்புகளின் முதல் மாடியை வெள்ளநீர் தொட்டது.
இதனால் கீழ்தளத்தில் உள்ள குடியிருப்புகளில் எலக்ட்ரானிக் பொருட்கள், மரச்சாமான்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வாகனங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். வீட்டுக்குள் புகுந்த சேற்றினை அகற்றி சுத்தம் செய்யவும், குப்பைகளை அகற்றவும், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வாகனங்களை பழுது பார்க்கவும் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
இது குறித்து ரெயின்போ நகர் பகுதி மக்களிடம் கேட்டபோது, கடந்த வாரம் பெய்த மழை முன் எப்போதும் இல்லாதது என்றாலும், எங்கள் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் தேங்கியது. இந்த பிரச்சனை நிரந்தரமாகவும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. நகரத்தின் மற்ற இடங்களில் தண்ணீர் வேகமாக குறைந்தது. ஆனால் எங்கள் பகுதியில் மோட்டார் பம்ப் மூலமே வெளியேற்ற முடிகிறது. புதுச்சேரியில் கனமழை பெய்யும் ஒவ்வொரு முறையும் இந்த பிரச்னையை சமாளிக்க வேண்டியிருக்கிறது. இப்பிரச்னைக்கு அரசால் ஒரு நிரந்தர தீர்வு காண முடியவில்லை என்றனர்.
கிருஷ்ணா நகரை சேர்ந்த மக்கள் கூறுகையில், வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுவதற்கு, இப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புதான் முக்கிய காரணம். முறையான வடிகால் அமைப்பு இல்லாததால், தரைமட்டத்தை உயர்த்தாமல் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அரசு அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். முறையான வடிகால் அமைப்பை உருவாக்குவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளை உடனடியாக துவக்க வேண்டும் என்றனர்.
இதனிடையே நகரத்தில் முறையான மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை அமைப்பதில் உள்ள சிக்கலைத் தீர்க்க விரிவான திட்டத்தினை அரசு தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தலைமைச்செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, நகரில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு காண நீண்ட கால திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிலிருந்து நிதியைப் பெறுவதற்கான ஆரம்ப அறிக்கையை அரசாங்கம் ஏற்கனவே தயார் செய்துள்ளது.
கிருஷ்ணா நகரில் தண்ணீர் தேங்கும் பிரச்னையை தீர்க்கும் வகையில் அரசின் திட்டங்களில் முக்கிய இடம்பிடித்துள்ளது. எனவே குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழாத வகையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை எடுப்போம். புதுச்சேரியில் மழைநீர், கழிவுநீர் பிரச்னைகளை கையாளுவதற்கு வலுவான வழிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.
The post கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர் வெள்ளத்தால் பாதிப்பு வெள்ளநீர் உட்புகுவதை தடுக்க சிறப்பு திட்டம் appeared first on Dinakaran.