குலசேகரம் : திருவட்டார் அருகே படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் இன்ஜினியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவட்டார் அருகே வீயன்னூர் முள்விளையை அடுத்த குன்றுவிளை பகுதியை சேர்ந்தவர் மத்தியாஸ் (65). கொத்தனார். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருந்தனர். இதில் மகள் ஷிபி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மகன் சிபின் (27) பி.இ. எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் கடந்த 5ம் தேதி சிபி விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது தந்தையிடம் தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை, சம்பளம் கிடைக்கவில்லை என்று கூறி புலம்பியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சம்பவத்தன்று ஆலயம் சார்பில் நடைபெறும் திருமண வகுப்புக்கு சென்று வந்தார். இரவு சிபி சாப்பிட்டு விட்டு மாடியில் உள்ள அறைக்கு தூங்க சென்றார். இதையடுத்து மறுநாள் காலை சர்ச்சுக்கு செல்வதற்காக சிபியின் தாய் மாடியில் உள்ள அறைக்கு எழுப்ப சென்றார்.
ஆனால் அங்கு சிபி விட்டத்தில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தொங்கியவாறு கிடப்பதை கண்டு கதறி அழுதார். இதையடுத்து மகனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிபி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற திருவட்டார் போலீசார் சிபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிப்புக்கு ஏற்ற வேலை, சம்பளம் கிடைக்காததால் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post திருவட்டார் அருகே படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் இன்ஜினியர் தற்கொலை appeared first on Dinakaran.