சென்னை: ஈடு இணையற்ற பொருளாதார மேதையும்; சிறந்த பண்பாட்டுப் பெட்டகமுமான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில், ஈடு இணையற்ற பொருளாதார மேதையும், ஜனநாயகக் காவலருமான முன்னாள் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அளவற்ற அதிர்ச்சியும், ஆறா துயரமும் கொண்டேன். மிகச் சிறந்த பண்பாட்டுப் பெட்டகம்; அடக்கத்திற்கும் எளிமைக்கும் இலக்கணம் வகுத்த உத்தமர். அவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது, வீட்டிலிருந்து அரசு வாகனத்தில் செல்லாமல், மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்வார்.
அவருடைய பேச்சில் நாடாளுமன்ற உரைகளில் கடின வார்த்தைகளே இருக்காது. மென்மையான, நெகிழ்ச்சியான சொற்களையே பயன்படுத்துவார்.2004 இல் அவர் தலைமை அமைச்சரானபோது, இந்திய அரசின் குறைந்தபட்ச செயல் திட்டத்திற்கு நான் வடிவம் கொடுத்து ஓர் அறிக்கையை அவரிடம் தந்தேன். அவரும், பிரணாப் முகர்ஜியும் , ஜெயராம் ரமேஷும் குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்தபோது என்னுடைய அறிக்கையின் முக்கியமான பகுதிகளை அப்படியே அந்த அரசு திட்ட அறிக்கையில் சேர்த்துக்கொண்டார். அதனால்தான் சேதுசமுத்திர கால்வாய் திட்டத்திற்கு மதுரையில் தொடக்க விழா நடந்தபோது, மன்மோகன் சிங் என்னைப் பார்த்து, “உங்கள் கனவு நிறைவேறப் போகிறது” என்றார்.
வேலூர் சிறை வாழ்க்கையில், சங்கொலி வார ஏட்டுக்கு நான் எழுதிய கடிதங்களை நூலாக்கி, ‘சிறையில் விரிந்த மடல்கள், From the Portals of a Prison’ என்ற நூலை அவர் வெளியிட, கலைஞர் அதனைப் பெற்றுக் கொண்டார்.அந்த நிகழ்ச்சியில், டாக்டர் மன்மோகன் சிங் பேசும்போது, “வைகோ என்னைச் சந்திக்கும் போதெல்லாம் தனிப்பட்ட பரிந்துரைகளையோ, கோரிக்கைகளையோ தந்தது இல்லை. பொதுமக்கள் நலனுக்கான, தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களையே தருவார். I Salute him” என்று என்னைப் பாராட்டினார்.தமிழீழ விடுதலைக்கு தமிழ்நாட்டில் போராடிக் கொண்டிருந்த கயல் எனும் சட்டம் பயின்ற சகோதரியை இலங்கைத் தீவில் இராணுவம் கைது செய்து வைத்திருக்கிறது.
உடனே விடுவிக்க வேண்டும் என்று நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, உடனடியாக தங்கை கயல் சிங்கள இராணுவத்திடமிருந்து விடுதலை பெற ஏற்பாடு செய்தார்.சிங்கள அரசு, இந்திய விமானப் படை விமானங்களை இலங்கை இராணுவ அணி வகுப்பில் இடம் பெறச் செய்ய ஏற்பாடுகள் நடந்தபோது, இரவு 11 மணிக்கு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம், “இலங்கைத் தீவில் நடப்பது தமிழ் இனப் படுகொலை, நமது போர் விமானங்களை சிங்கள இராணுவ அணி வகுப்புக்கு அனுப்பக் கூடாது” என்று நான் விடுத்த கோரிக்கையை அவ்விதமே ஏற்று, இந்திய விமானங்கள் பங்கெடுப்பதைத் தடுத்தார். இராணுவ ரீதியான உதவிகளை இந்திய அரசு, இலங்கை அரசுக்குச் செய்தபோது, நான் அவருக்கு பல கடிதங்கள் எழுதினேன்.
அவர் உள்ளம் தமிழர்கள் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்தாலும், அவர் விருப்பத்திற்கு மாறாகவே இந்திய அரசு இலங்கைக்கு உதவியது. என்னுடைய மகள் கண்ணகியின் திருமண வரவேற்பு டெல்லியில் நடைபெற்றபோது வருகை தந்து சிறப்பு செய்தார். முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும், சேதுகால்வாய் திட்டத்திலும் அவர் தமிழ்நாட்டுக்கு பேருதவிகள் செய்தார். மன்மோகன் சிங்கின் புன்னகை பூத்த முகத்தையும், இனிமை ததும்பும் உரையாடலையும் நான் மறக்க முடியாது. இமாலயப் பொறுமைக்கு இலக்கணம் வகுத்தவரும், எளிமையானவரும், உலக நாட்டுத் தலைவர்களிடையே மதிப்பையும் பெற்றிருந்த மாமனிதர் மன்மோகன் சிங் மறைவு இந்திய நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அந்தப் பெருந்தகை மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post ஈடு இணையற்ற பொருளாதார மேதையும்; சிறந்த பண்பாட்டுப் பெட்டகமுமான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு வைகோ இரங்கல்..!! appeared first on Dinakaran.