×

குலசேகரம் அருகே டெம்போவை சிறைபிடித்ததால் பழிக்கு பழி; கல்லூரி மாணவி மீது பன்றி கழிவை கொட்டிய கும்பல்: போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

குலசேகரம்: குலசேகரத்தை அடுத்த பிணந்தோடு சிறக்குளத்தின்கரை பகுதியில் ஹோமியோபதி டாக்டர் ஒருவர் பன்றிப்பண்ணை நடத்தி வந்தார். பன்றிகளின் தீவனத்துக்காக கேரளா, தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்து இறைச்சி கழிவு, ஓட்டல், திருமண மண்டபத்தில் மீதமான உணவுகளை பண்ணைக்கு கொண்டு வந்தார். இதனால் கடும் துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்பட்டதாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம், காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து சில மாதங்களுக்கு முன்பு பன்றி பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டது. மாதக்கணக்கில் பூட்டிக்கிடந்த நிலையில் அந்த நபர் கால்நடை வளர்ப்பு என்ற பெயரில் அனுமதி வாங்கி மீண்டும் பண்ணையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் இறைச்சிக்கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து பன்றிகளுக்கு உணவளித்து வருகிறார்.

இதனை அந்த பகுதி பொதுமக்கள் தட்டிகேட்டுள்ளனர். ஆனால் அந்த நபர் குண்டர்கள் சிலரை வைத்து மக்களை மிரட்டுவதாக கூறப்படுகிறது. நேற்று இரவு சுமார் 7 மணியளவில் மினி டெம்போவில் பன்றிப்பண்ணைக்கு கழிவுகள் கொண்டுவந்து கொட்டப்பட்டது. திரும்பி செல்ல முயன்றபோது பொதுமக்கள் மினிடெம்போவை சிறைபிடித்தனர். இதனால் பன்றி பண்ணையை சேர்ந்தவர்களுக்கும், பொதுமக்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் அங்கு சென்று மினி டெம்போவை பறிமுதல் செய்து குலசேகரம் காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த பன்றி பண்ணை உரிமையாளர் உள்ளிட்ட சிலர், மினிடெம்போ பறிமுதலுக்கு காரணமாக பொதுமக்களின் வீடு முன்பு நின்று மிரட்டினர். இன்று எனது டெம்போவை பறிமுதல் செய்ய வைத்தீர்கள், நாளை (அதாவது இன்று) அதற்கான பலனை காண்பீர்கள்.

உங்களின் பிள்ளைகள் சாலையில் சென்றால் ஆசிட் வீசுவோம் என பகிரங்கமாக மிரட்டினார்களாம். இதனால் பதற்றமடைந்த பொதுமக்கள் சிலர் இரவோடு இரவாக குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். ஆனால் போலீசார் திருப்பி அனுப்பிவிட்டனர். இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். தினமும் காலையில் பசுமாட்டின் பாலை கறந்து பாட்டில்களில் அடைத்து பிணந்தோடு சேக்கல் பகுதியில் உள்ள வீடு, கடைகளில் கொண்டு விற்பனை செய்வது வழக்கம். அதன்படி இன்று காலை சுமார் 10 பால் பாட்டில்களை பையில் வைத்துக்கொண்டு தனது ஸ்கூட்டியில் புறப்பட்டு சென்றார். இதனை பன்றிப்பண்ணையை சேர்ந்த குண்டர்கள் சிலர் ரகசியமாக கண்காணித்துள்ளனர்.

மாணவி செக்கல் பகுதியில் வந்தபோது அங்கு வந்த குண்டர்கள் மாணவியை மறித்தனர். பின்னர் திடீரென தாங்கள் வாளிகளில் வைத்திருந்த பன்றி கழிவுகளை மாணவி மீது கொட்டினர். உடனே மாணவி அலறினார். பன்றியின் கழிவுகளால் உடல் முழுவதும் நனைந்த நிலையில், ஸ்கூட்டியும், பால் பாட்டில்களும் நாசமானது. இந்த சம்பவத்தை மாணவி பொதுமக்களிடம் கூறி கதறி அழுதார். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குலசேகரம் போலீஸ் நிலையத்தை நோக்கி புறப்பட்டு சென்றனர். அங்கிருந்த போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்லூரி மாணவி மீது பன்றிக்கழிவை ஊற்றி அவமானப்படுத்திய குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என பொதுமக்கள் ஆவேசத்துடன் கூறினர். இந்த சம்பவத்தால் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், அதேநேரத்தில் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

The post குலசேகரம் அருகே டெம்போவை சிறைபிடித்ததால் பழிக்கு பழி; கல்லூரி மாணவி மீது பன்றி கழிவை கொட்டிய கும்பல்: போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Kulasekaram ,Sirakkulam ,Pinanthodu ,Kerala ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்