×

வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11ம் தேதி கேரளா பயணம்: பெரியார் நினைவகம் – நூலகத்தை திறந்து வைக்கிறார்

* கேரள முதல்வர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தினை திறந்து வைக்க கேரளாவிற்கு வரும் 11ம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளார். கேரள மாநிலம் வைக்கம் நகரில் மகாதேவர் கோவில் இருக்கும் தெருவில் நடந்தாலேயே தீட்டாகிவிடும்; ஆதலால், கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களிலும், கோவிலுக்கு எதிரே உள்ள தெருவிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் முதலான சமுதாயத்தினர் நடந்து செல்லவே கூடாது என்னும் கொடிய தடை இருந்தது.

அந்த தடையை உடைத்திட 1924ம் ஆண்டில் நடைபெற்ற போராட்டம்தான் வைக்கம் போராட்டம். வைக்கம், கேரள மாநிலத்தின் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் அடங்கியிருந்த நகரமாகும். ஈழவர் சமுதாயத்தை சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் என்பவர் தீண்டத்தகாதவர் என்பதால், அந்த நீதிமன்றத்திற்குள் செல்ல முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. இதனை எதிர்த்துதான் வழக்கறிஞர் மாதவன், கேசவ மேனன், டி.கே.மாதவன், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் முதலான பலர் போராடினார்கள். அப்படி போராட்டம் நடத்திய அனைவரையும் திருவாங்கூர் சமஸ்தான போலீசார் கைது செய்தனர். அதனால், போராட்டம் நின்றுவிடும் சூழ்நிலை உருவானது.

அப்போது இறுதியாக கைதாகி சிறை சென்ற பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன் ஆகியோர் கையெழுத்திட்டு; அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த பெரியாருக்கு கடிதம் எழுதி, தாங்கள்தான் வைக்கம் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வெற்றி தேடித்தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். அந்த கடிதம் கிடைத்ததும், 1924ம் ஆண்டு ஏப்.13ம் தேதி வைக்கம் நகருக்கு வந்த பெரியாரால் போராட்டம் தீவிரம் அடைந்தது. திருவாங்கூர் மகாராஜா ஏற்கனவே பலமுறை ஈரோடு நகருக்கு வந்து பெரியார் இல்லத்தில் விருந்தினராக தங்கியிருந்தவர்.

எனவே, பெரியாரை தம் விருந்தினராக நடத்த விரும்பினார். அதை காவல் துறையினரும் மகாராஜாவின் அலுவலர்களும் பெரியாரிடம் தெரிவித்தனர். ஆனால், பெரியார் நான் அரச விருந்தாளியாக இங்கு வரவில்லை என நயமாக கூறி மறுத்துவிட்டார். அதன் பின்னர், பெரியாரின் போராட்டத்தில் மக்கள் திரண்டதை கண்டு பொறுக்க முடியாத நிலையில், திருவாங்கூர் போலீசார் பெரியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். முதல் முறை 1 மாதமும், இரண்டாவது முறை 6 மாதமும் கடுங்காவல் தண்டனை வழங்கி, பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரியார் கைதாகி சிறையில் இருந்தபோது, அவரின் துணைவியார் நாகம்மை, தங்கை கண்ணம்மாளும் வைக்கம் வந்து, போராட்டக்களத்தில் இறங்கினர். வைக்கம் நகரை சுற்றியிருந்த கிராம மக்களும் திரண்டு தொடர்ந்து போராடியதால் திருவாங்கூர் சமஸ்தான அரசு பணிந்து, மகாதேவர் கோவில் தெருக்களில் ஈழவர் முதலான வகுப்பார் நடந்து செல்வதற்கு இருந்த தடையை நீக்கி, எல்லோரும் செல்லலாம் என்று ஆணை பிறப்பித்தது. இப்படி, வைக்கம் பேராட்டத்தை வெற்றிபெற செய்ததால் பெரியாரை திரு.வி.க. “வைக்கம் வீரர்” என பாராட்டி எழுதினார்.

வைக்கம் வீரர் பெரியார் நினைவாக, அந்நகரில் பெரியார் நினைவகமும், பெரியார் நூலகமும் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ளது. பெரியார் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றாண்டு நிறைவினை கொண்டாடுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வைக்கம் நகரில் உள்ள பெரியாரின் நினைவகத்தையும், நூலகத்தையும் புதுப்பித்திட ரூ.8 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கி ஆணையிட்டார். அதன்படி, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையால் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12ம் தேதி காலை 10 மணியளவில் திறந்து வைக்கிறார்.

இந்த மாபெரும் விழாவிற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையேற்கிறார். திராவிடர் கழக தலைவரும், கி.வீரமணி முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உட்பட கேரள அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்புரை நிகழ்த்திட, கேரள மாநில அரசின் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் நன்றியுரை வழங்குகிறார்.

இந்திய சமூகநீதி வரலாற்றில் தலைமையிடம் பெற்றுள்ள இந்த வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11ம் தேதி கேரள மாநிலம் வைக்கம் நகருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். சமூகநீதி வரலாற்றின் முதல் வெற்றி விழா நகரமான வைக்கம் நகரில் தமிழ்நாடு அரசு, கேரள மாநில அரசோடு இணைந்து இந்த மகத்தான விழாவைக் கொண்டாடுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11ம் தேதி கேரளா பயணம்: பெரியார் நினைவகம் – நூலகத்தை திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Vaikam Centenary Commemoration ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Kerala ,Periyar Memorial - Inaugurate Library ,Chennai ,Vaikam Centenary ,M. K. Stalin ,Periyar Memorial and Library ,Vaikam Centenary Celebration ,Periyar Memorial - Opens Library ,
× RELATED அரசு போக்குவரத்துக்கழக மதுரை...