×

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டு வழக்கம்போல் முல்லைப் பெரியாறு அணையில் மராமத்து பணிக்காக தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் கட்டுமானப் பொருட்களை மூன்று நாட்களுக்கு முன்பு இரு லாரிகளில் கொண்டுசெல்லும்போது வல்லக்கடவு என்ற இடத்தில், கேரள வனத்துறை சோதனைச் சாவடியில் கட்டுமான பொருட்களை கொண்டுசென்ற இரு லாரிகளும் தடுத்து நிறுத்தப்பட்ட செய்திகள் வருகின்றன. கேரள நீர்வளத் துறையிடம் (பொதுப்பணித் துறை) அனுமதி பெற்ற பின்னரே கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுகுறித்து எந்த தகவலும் வராததால், அவற்றை அனுமதிக்க மாட்டோம் என்று நேற்று வரை கேரள வனத் துறை, கட்டுமானப் பொருட்கள் கொண்டு சென்ற லாரிகளை முல்லை பெரியாறு பகுதிக்குள் அனுமதிக்கவில்லை.

இந்த செய்தியை அறிந்த, முல்லைப் பெரியாறு அணையை நம்பியுள்ள 5 மாவட்ட மக்களும் இன்றைக்கு கடும் கொந்தளிப்பில் உள்ளனர். 5 மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டம், லோயர்கேம்ப் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதை, தமிழக காவல் துறைதடுத்து நிறுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு தேவையான அனுமதி பெறாமல் இருக்கும் அரசுக்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். முல்லை பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : EDAPPADI PALANISAMI ,MULLAI ,PERIYARU ,DAM ,Chennai ,Tamil Nadu Water Resources Department ,Maramatha ,Mullaipperyaru Dam ,Mullai Periyaru Dam ,
× RELATED இரட்டை இலை சின்னம் விவகாரத்தில்...