சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்திபனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சீரமைப்பு, மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான பொறுப்புகளுக்கு இன்று முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பம் பெறப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 15 நாட்களுக்குள் விருப்ப மனுவை அளிக்கலாம். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு பரிசீலனை செய்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு பரிந்துரை செய்ய இருக்கிறோம். புதியவர்களுக்கு நிச்சயமாக பதவி வழங்கப்படும். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் வரும் 7ம்தேதி காலையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் படங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.
வரும் 8ம்தேதி கிராமம் தோறும் காங்கிரஸ் என்ற தலைப்பில், கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடக்கிறது. கிராம, நகர, பேரூராட்சி, மாநகராட்சி கமிட்டியை யாரெல்லாம் சிறப்பாக செய்து முடிக்கிறார்களோ அவர்களுக்கு மாநில அளவில் பதவி, எம்எல்ஏ போன்ற பதவிகளுக்கு தேர்தலில் போட்டியிட முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ, நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு ஆகியோர் உடன் இருந்தனர்.
The post தமிழக காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு மாவட்ட, மாநில நிர்வாகிகளுக்கான பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: சிறப்பாக செயல்பட்டால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.