×

கேரளா சென்ற ரயிலில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கற்பூரம் ஏற்றிய ஐயப்ப பக்தர்கள்: வீடியோ வெளியாகி பரபரப்பு

சேலம்: சேலம் வழியே கேரளாவிற்கு நேற்றிரவு சென்ற ரயிலில் பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கற்பூரம் ஏற்றி ஆந்திரா ஐயப்ப பக்தர்கள் வழிபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஆர்பிஎப் போலீசார் விசாரித்து வருகின்றனர். கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. ரயில்களில் பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள், பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கற்பூரம் ஏற்றக்கூடாது என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறி கற்பூரம் ஏற்றி வழிபட்டால், 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இச்சூழலில் நேற்றிரவு சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியே சென்ற திருப்பதி-கொல்லம் வாராந்திர எக்ஸ்பிரசில் (17421), ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளனர். இந்த வழிபாட்டு நிகழ்வை அந்த ரயிலில் பயணித்த சக பயணி, செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருப்பதியில் நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில், சித்தூர், காட்பாடி வழியே சேலத்திற்கு நேற்றிரவு 8.04 மணிக்கு வந்து, ஈரோட்டிற்கு இரவு 9.09க்கும், திருப்பூருக்கு இரவு 10.08க்கும், கோவைக்கு இரவு 11.03க்கும் சென்று, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் வழியே கொல்லத்திற்கு இன்று காலை 6.13மணிக்கு சென்றடைந்துள்ளது.

இந்த ரயிலில் தான், ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் அதிகளவு பயணித்துள்ளனர். அதில், ஒரு இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் இருந்த 20க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப சுவாமி படத்தை இருக்கையின் மேல்பகுதியில் வைத்து, பஜனை பாடியுள்ளனர். பிறகு தாம்பூல தட்டில் கற்பூரம் ஏற்றி ஐயப்பனுக்கு காட்டி வழிபட்டனர். அப்போது சாமி சரணம் பாடலை பாடுகின்றனர். பெண் பக்தர் ஒருவரும் பஜனையில் ஈடுபடுகிறார்.
இதனை சில சக பயணிகள், தட்டிக்கேட்டுள்ளனர். ஆனாலும், தெலுங்கில் பேசியபடி அந்த ஐயப்ப பக்தர்கள் கற்பூரத்தை ஏற்றி வழிபாட்டை நடத்தியுள்ளனர். ஐயப்ப பக்தர்கள் கற்பூரம் ஏற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியநிலையில், ஆர்பிஎப் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

The post கேரளா சென்ற ரயிலில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கற்பூரம் ஏற்றிய ஐயப்ப பக்தர்கள்: வீடியோ வெளியாகி பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Kerala ,Salem ,RPF ,Sabarimala, Kerala State ,Aiyappa ,
× RELATED மறைமலைநகர் அருகே ஐயப்பன் கோயிலில் படி பூஜை